நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறி முதல்முறையாக மக்களை நேரடியாக சந்தித்து தனது முதல் உரையை ஆற்றியுள்ள நிலையில், அந்த பேச்சைக் கேட்டு முடித்ததுமே இயக்குநர் பா.ரஞ்சித் தலைவர் விஜய்க்கு எனது வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
சினிமா துறையில் இருந்து முன்னணி நடிகர்கள், இந்தியாவில் பிரபல அரசியல் தலைவர்கள் என பலரும் விஜய்யின் மாநாட்டில் கலந்துக் கொண்டு பேசுவார்கள் என்றெல்லாம் ஏகப்பட்ட பேர் எதிர்பார்த்தனர். ஆனால், தனது கட்சிக் கொள்கைகளை தானே முன் நின்று விஜய் பேசியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
விஜய்யின் சினிமா ஆடியோ லாஞ்சை விட 10 மடங்கு சிறப்பான அதிர வைக்கும் பேச்சை தலைவர் விஜய் கொடுத்துள்ளார் என சோஷியல் மீடியாவில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மக்களுக்கு என்ன வேண்டுமோ அதை கொடுக்காத ஆட்சி இருந்தால் என்ன போனால் என்ன என திமுக ஆட்சிக்கு அடிக்கடி வெளிப்படையாகவே விஜய் குட்டு வைத்து பேசிய நிலையில், இப்படியொரு போல்டான விஜய்யை இதற்கு முன் பார்த்தது இல்லை என விவாதங்கள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில் பா ரஞ்சித் தனது twitter பதிவில் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ” என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் கன்னி பேச்சை முடித்திருக்கும் #தமிழகவெற்றிக்கழகம் தலைவர் திரு. விஜய் அண்ணா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு ” மற்றும் சாதி மத வர்க பிரிவினை வாதத்திற்க்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்க்கிறேன். மகிழ்ச்சி!” என பா. ரஞ்சித் விஜய் பேசி முடித்ததும் தனது வாழ்த்தை முதல் நபராக தெரிவித்துள்ளார்.