யோகி பாபு அறிமுக நாயகன் ஏகன் பிரகிட இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்து இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.
தாய் தகப்பனால் கைவிடப்பட்ட இரண்டு குழந்தைகள் யோகி பாபுவின் அரவணைப்பால் வளர்ந்து எப்படி பெரிய ஆட்கள் ஆகிறார்கள் என்பதே கதைக்கரு.
அறிமுக நாயகன் ஏகனிடம் அழகாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. நகைச்சுவை நாயகனாகவும் கதாநாயகனாகவும் யோகி பாபுவை பார்த்த நமக்கு, குணச்சித்திர நாயகனாக காட்டியிருப்பது அருமை. பிரகிடா சண்டக்கோழி படத்தில் வரும், மீரா ஜாஸ்மின் போல் வந்து போகிறார். ஏகனின் தங்கச்சியாக வரும் நடிகை அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இசையமைப்பாளர் ரகுடந்தனின் இசை படம் முழுவதும் கவிதையாகவே நகர்ந்து செல்கிறது.
ஆனால் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை, படம் பார்ப்பவர்கள் அழுகுதே ஆகவேண்டும் என்ற முனைப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இந்த படத்தை எடுத்திருக்கிறார் போல. வலியை திணித்தது போல் சில பல காட்சிகள் உள்ளன.
அது மட்டும் அல்லாமல் தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கச்சி பாசம் சார்ந்த படங்கள் பல வந்துவிட்டன. அதில் இன்னும் குறியீடுகளாக வைக்கப்படும் படங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று பாசமலர், இன்னொன்று முள்ளும் மலரும். இந்த இரண்டு படங்களையும் கலந்து ஒரு படம் கொடுத்தால் என்ன என்று யோசித்து இருப்பார் போல, படம் அவ்வளவு மெதுவாக நகர்கிறது.
20 நிமிடத்தில் சொல்ல வேண்டிய கதையை 2 மணி நேரம் இழுத்தடித்தது தான் இந்த படத்தின் மிகப்பெரிய குறை.
இறுதியில் மனிதம் பற்றி பேசிய விஷயம் அருமை.
தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற படங்களை இயக்கிய சீனு ராமசாமியிடமிருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை.
ஆக மொத்தத்தில் கோழிப்பண்ணை செல்லத்துரை, பெரிதாக ஜொலிக்கவில்லை.