லப்பர் பந்து திரை விமர்சனம்

அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், காளி வெங்கட், ஸ்வஸ்திகா, சஞ்சனா பால சரவணன் இன்னும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.

பெரம்பலூர் கடலூர் மாவட்டத்தில் இந்த கதை நடக்கிறது. கெத்து எனும் கதாபாத்திரத்தில் ஹீரோயினுக்கு அப்பா கதாபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்துள்ளார். விஜயகாந்த் ரசிகராக அவரை காட்டியுள்ளனர். அன்பு எனும் கதாபாத்திரத்தில் ஒடுக்கப்பட்ட ஜாதியை சேர்ந்தவராக ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். ஒதுக்கப்பட்டவன் என்பதால் கிரிக்கெட் டீமில் அவரை சேர்ப்பதில் கூட சாதிய பாகுபாடு பார்க்கப்படுகிறது. எந்த டீமில் தன்னை சேர்த்துக் கொள்கின்றனரோ அந்த அணிக்கு கடைசி சப்ஸ்டியூட்டாக விளையாடி வருகிறார்.

பேட்டிங்கில் கெத்தாக இருக்கும் தினேஷின் மகளையே ஹரிஷ் கல்யாண் காதலிக்கிறார். ஒரே ஓவரில் கெத்தை அவுட் ஆக்கிவிடுவேன் என ஹரிஷ் கல்யாண் சொல்ல அங்கிருந்து இருவருக்கும் இடையே நடக்கும் ஈகோ மோதல்களை உணர்ச்சி பூர்வமாகவும் ரசிகர்களுக்கு எங்கேயும் போராடிக்காத வகையில் காமெடியாகவும் கடைசியில் மெசேஜ் உடன் முடிக்கும் விதமும் அருமையாக உள்ளது.

விஜயகாந்த் ரசிகராக வரும் அட்டகத்தி தினேஷும் விஜய் ரசிகராக வரும் ஹரிஷ் கல்யாணுக்கும் இடையே நடக்கும் ஈகோ மோதல் இந்த படத்தில் நல்லாவே வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. பார்க்கிங் படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் இருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ மோதல் கடைசி வரை படத்தை பார்க்க வைத்தது போல இந்த படத்திலும் அந்த விஷயமும் பக்காவாக க்ளிக் ஆகியிருக்கிறது.

இவர்கள் இருவரை தவிர ஹரிஷ் கல்யாணின் காதலியாக வரும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி வதந்தி வெப்சீரிஸுக்கு பிறகு இந்த படத்தில் வேறலெவல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய அம்மாவாகவும் தினேஷுக்கு ஜோடியாகவும் நடித்துள்ள ஸ்வஸ்திகாவும் நடிப்பில் மிரட்டியுள்ளார். இவர்களை தவிர்த்து காளி வெங்கட், பால சரவணன், ஜென்சன் திவாகர், தேவதர்ஷினி உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளது தான் படத்திற்கு பெரும் பலமாக உள்ளது. பிளஸ்: “சில்லாஞ்ச் சிறுக்கியே.. என்னை கொல்லுற அரக்கியே” என ஷான் ரோல்டன் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் வேறலெவலில் களமிறங்கி சதம் விளாசியுள்ளார். அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து சொல்ல வந்த விஷயத்தை பாடம் நடத்துவது போல சொல்லாமல் அனைத்து ரசிகர்களும் ரசித்து பார்க்கும்படியே வாழைப்பழத்தில் ஊசியை குத்துவது போல குத்தியிருக்கும் இடமும் வசனங்களும் மிகப்பெரிய பிளஸ் ஆக பார்க்கப்படுகிறது.

மீண்டும் ஒரு சாதிய படமா என ரசிகர்கள் படத்தை பார்க்கும் முன்னதாகவே யோசிக்க வைத்து விடும் கதைக்களம். கடைசியில் கிளைமேக்ஸ் இப்படித்தான் முடியும் என எதிர்பார்ப்பதை போல முடியும் இடங்கள் என ஒரு சில குறைகள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக படமாக பார்க்கும் போது எங்கேயும் போரடிக்காமல் தரமான படத்தை பார்த்த அனுபவத்தை இந்த லப்பர் பந்து கொடுக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.

இந்தப் படத்தின் மூலம் அட்டகத்தி தினேஷ் ஒரு கம் பேக் கொடுப்பார் என்று நம்பலாம். தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.