சுதா கோங்கரா இயக்கப் போகும் அடுத்தபடத்தின் பெயர் ‘வேட்டை நாய்கள்’?

‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் கம் பேக் கொடுத்த இயக்குநர் சுதா கொங்கரா, சூர்யாவிற்கு சூரரைப்போற்று திரைப்படத்தை கொடுத்து, அவரின் சரிந்த கிடந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்தினார்.

அந்தப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. அதே போல சிறந்த திரைக்கதைக்கான விருது சுதா கொங்கராவிற்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சூர்யா – சுதா கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டு, அந்தப் படத்திற்க்கு புறநானூறு என பெயர் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தி எதிர்ப்பை கதைக்களமாக கொண்ட இந்த படத்திற்கான வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருந்த நிலையில், திடீரென்று சூர்யா தரப்பில் இருந்து, அந்தப்படம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆன நிலையில், சுதா கொங்கரா அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் அவர் தற்போது நாவல் ஒன்றை படமாக்க இருக்கிறார். ஆம், ஜூனியர் விகடனில் தொடராக வெளியான ‘ வேட்டை நாய்கள் ‘ நாவலை படமாக்க இருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தை கதைக்களமாக கொண்ட இந்த நாவல் அதிகாரத்தைக் கைப்பற்ற மனிதர்களுக்குள் நடக்கும் போட்டியை கருவாக கொண்டது. எழுத்தாளர் நரன் இந்த நாவலை எழுதி இருந்தார்.

இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கும் சுதா கொங்கரா, ” நரனின் ‘வேட்டை நாய்கள்’ நாவல் தூத்துக்குடி மாவட்டத்தில் கரையிலும், கடலிலும் புதைந்து இருக்கும் உலகத்தை நமக்கு காண்பிக்கிறது. இந்த அற்புதமான நாவலின் உரிமையை வாங்கி விட்டேன். இந்த நாவலுக்கான திரைக்கதை அமைக்கும் பணியை துவங்க ஆர்வமாக இருக்கிறேன். திரைக்கதை அமைக்கும் பணி கடினமானது என்றாலும் கூட, அது மகிழ்ச்சிகரமான ஒன்றுதான். இது ஒரு இயக்குனருக்கான பெரிய வெகுமதி. இந்த படத்தின் மூலம் நான் பார்த்திராத ஒரு வாழ்க்கையை வாழ இருக்கிறேன். இவை எல்லாவற்றிற்கு மேலாக இந்த கதையில் யார் நடிக்க போகிறார்கள் என்பது முக்கியமானது. இந்த கதைக்கு உயிர் கொடுக்கப்போவது யார்? ” என்று பதிவிட்டு இருக்கிறார்.