68வது திரைப்படமாக “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், அடுத்த படியாக தனது 69வது திரைப்பட பணிகளை துவங்க உள்ளார். அதற்கு முன்னதாக விக்கிரவாண்டியில் நடைபெறும் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டை இந்த மாத இறுதியில் அவர் நடத்த உள்ளார். சுமார் ஒரு லட்சம் பேர் வரை இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த மாநாட்டில் சிறுவர்கள் யாரும் கட்டாயம் பங்கு பெற கூடாது என்றும், மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெரியவர்கள் தங்களோடு அவர்களுடைய குழந்தையை அழைத்து வரக்கூடாது என்றும் திட்டவட்டமாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த கட்சி மாநாட்டை முடிக்கும் தளபதி விஜய், உடனடியாக தனது 69வது திரைப்பட பணிகளை துவங்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் தளபதியின் 69வது மற்றும் கலை உலகில் இறுதி திரைப்படம் உருவாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் ஹெச் வினோத் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து, அரசியல் சம்பந்தப்பட்ட திரைப்படம் ஒன்றை இயக்குவதாக இருந்தது.

உலக நாயகனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே அந்த திரைப்படத்தை தயாரிக்கும் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. இந்த சூழலில் தான் முன்னறிவிப்புகள் ஏதுமின்றி, அந்த திரைப்படம் கைவிடப்பட்ட நிலையில், உலக நாயகன் கமல்ஹாசனுக்காக எழுதிய அந்த கதையை தான் இப்போது தளபதி விஜய்க்கு வினோத் பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.