அருண் பாண்டியன், அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.
டிமானண்டி காலனி என்ற படம்தான் இயக்குனருக்கு ஒரு மிகப்பெரிய அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்தது.
இடையில் கோப்ரா என்று மாபெரும் தோல்வி படத்தை எடுத்த காரணத்தினால் ஒரு ஓரத்தில் முடங்கி இருந்தார்.
இந்நிலையில் டிமான்டி பார்ட் 1-ன் கதாநாயகனான அருள் நிதியே அவரிடம் நேரடியாக சென்று டிமாண்டி காலனி பார்ட் 2 படத்தை எடுக்குமாறு கூறினார்.
இதனால் உருவானது தான் டிமாண்ட்டி காலனி பார்ட் 2.
ஒரு தோல்வி படத்தை கொடுத்த இயக்குனர் என்ற மதமதப்பிலேயே படத்தை பார்க்க அமர்ந்தோம்.
படத்தின் ஆரம்பத்தில் ப்ரியா பவானி சங்கரை காட்டும்போதும் நாங்கள் சலிப்பையே உணர்ந்தோம். ஆனால் அது 20 நிமிடம் கூட நீடிக்கவில்லை.
முதல் பாதி ஜெட் வேகத்தில் பறக்க ஆரம்பித்தது. இரண்டாம் பாதியில் ஜெட்டின் வேகம் சில தடுமாற்றங்களை சந்தித்தாலும் சூடு பிடிக்க தான் செய்தது.
கதைப்படி முதல் பாகத்தில் தூக்கில் தொங்கிய சாம் என்ற வாலிபனின் காதலியான பிரியா பவானி சங்கர், அவன் ஆவியானவுடன் அவனோடு பேச முற்படுகிறார். அதற்காக ஒரு மாந்திரீகவாதியின் உதவியை நாடுகிறார். அந்த மாந்திரீகவாதிவியின் உதவியால், சாம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கிறார். அங்கு செல்லும்போது தான் ஒருவரின் உதவி தேவைப்படுகிறது என்பதை புரிந்து கொள்கிறார். யார் அந்த ஒருவர் அவருக்கு என்ன உதவி தேவைப்படுகிறது என்பதே படத்தின் கதை.
கதைப்படி அருள்நிதி தான் கதாநாயகன் என்றாலும், பிரியா பவானி சங்கர் தான் படம் முழுவதும் உலாவுகிறார். கதையைத் தாங்கிப் பிடிக்கிறார். ப்ரியா பவானி சங்கர் ஒரு படத்தில் நடித்தால் அந்த படம் ஓடாது என்ற அந்த கலங்க பெயரை, இந்தப் படம் மாற்றும் என்று நம்பிக்கை கொள்ளலாம்.
அருள்நிதி வம்சம் படத்தில் நடிக்கும் போது வெளிப்படுத்திய நடிப்பிலிருந்து, கிட்டத்தட்ட 80 சதவீதம் மெருகேறி இப்பொழுது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் இந்த படத்தில்.
படத்தில் அருண் பாண்டியன் சின்ன கதாபாத்திரமே செய்தாலும் கச்சிதமாக செய்திருக்கிறார்.
படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை. பேய் படம் என்ற காரணத்திற்காக வெறும் பயமுறுத்த வேண்டும் என்ற நோக்கில் மட்டும் இந்த படத்தை எடுக்காமல், கதைக்குத் தேவையான மிரட்டல் அந்த மிரட்டலுக்கு தேவையான திரைக்கதை என்று ஒவ்வொரு அடுக்காக கதையை செதுக்கியிருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.
அதற்குப் பின்னணியாக படத்தில் இசையும் மிகப்பெரிய வலுவை சேர்த்து இருக்கிறது.
ஆங்காங்கே சில தொய்வுகள் ஏற்பட்டாலும், படத்தை பாதிக்காது, என்பதை அடுத்தடுத்த காட்சிகள் மூலம் நமக்கு புரிய வைக்கிறது.
படத்தின் ஒளிப்பதிவாளர், மற்றும் ஆர்ட் டைரக்டர் பிரேமை செதுக்கியிருக்கிறார்கள்.
படத்தின் குறையாக பார்க்கப்படுவது இரண்டாம் பாதியில் கதை ஒரே இடத்தில் சுற்றுவதே. அதையும் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாகி இருக்கலாம்.
அஜய் ஞானமுத்து கோப்ரா என்ற தோல்வி படத்தை கொடுத்த ஒரே காரணத்திற்காக ஓரம் கட்டப்பட்டவர், ஆனால் இந்த டீமாண்ட்டி காலனி 2 படத்தின் மூலமாக அவர் மீண்டும் அங்கீகரிக்கப்படுவார் என்று நம்பலாம்.
ஆக மொத்தத்தில் டிமாண்ட்டி காலனி 2 படம் அனைவரும் பார்க்க வேண்டிய தரமான பேய் படம்.