ஆகஸ்ட் 16 முதல் புது படங்கள் தொடங்குவது தற்காலிக நிறுத்தம் : தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், நடப்பு தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

அதில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு ஓடிடி-யில் வெளியிட வேண்டும். சில நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏற்கெனவே அட்வான்ஸ் பெற்ற படத்தை முடித்துவிட்டு, அடுத்த படத்துக்குச் செல்ல வேண்டும். நடிகர் தனுஷ், பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருப்பதால் வரும் காலங்களில் தனுஷ் நடிக்கும் புதிய படங்களின் பணிகளை துவங்கும் முன் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும்.

பல படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் தேங்கி நிற்பதை மாற்ற புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளது. அதனால் 16.8.2024 முதல் புதிய படங்கள் தொடங்குவதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். தற்போது நடக்கும் படப்பிடிப்புகளை அக்.30-க்குள் முடிக்க வேண்டும். நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் சம்பளத்தை முறைப்படுத்தி தமிழ் திரைத்துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டி உள்ளதால் 01.11.2024 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.