நீங்கள் நினைப்பது போல் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல – ஜமா படத்தின் இயக்குனர் பாரி இளவழகன்

உலகத் திரைப்பட விழாக்கள் பலவற்றி கலந்து கொண்டு விருதுகளையும் வென்ற திரைப்படம் ‘கூழாங்கல்’. அப்படத்தைத் தயாரித்த லேர்ன் அன்ட் டீச் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஜமா’.

தெருக்கூத்து கலை பற்றியும், அந்தக் கலைஞர்களின் வாழ்க்கையைப் பற்றியும், இதுவரை சொல்லப்படாத விஷயத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம்தான் ‘ஜமா’.

அறிமுக இயக்குநர் பாரி இளவழகன் எழுதி, இயக்கி, கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீகிருஷ்ண தயாள், கேவிஎன். மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சமீபத்தில் வெளியான ‘ஜமா’ படத்தின் டீசருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

படம் பற்றி இயக்குநர், நடிகர் பாரி இளவழகன், நடிகர் சேத்தன் உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.

பாரி இளவழகன் பேசுகையில்,

‘ஜமா’ டீசர் மற்றும் டிரைலர் பார்க்கும் போதே இது தெருக்கூத்து கலைஞர்களின் படம் என்பது தெரிந்துவிடும். திரைப்படங்கள், குறும்படங்கள் உள்ளிட்ட கலைப்படைப்புகளில் தெருக்கூத்து கலைஞர்கள் பற்றி தவறான தகவல்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக அவர்கள் மிகவும் கஷ்ட்டப்படுவதாகவும், அந்த கலை அழிந்து வருவதாகவும் காட்டுகிறார்கள். அது உண்மை அல்ல, அவர்கள் நன்றாகவும், வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் தான் இருக்கிறார்கள். ஆனால், கலைப்படைப்புகளில் அந்தக் கலை பற்றி தவறான உதாரணங்களை சொல்கிறார்கள். அதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கும். காரணம், தெருக்கூத்து கலை பின்னணியில் வாழ்ந்தவன் நான்.

எனது ஊரில், எனது உறவினர்கள் பலர் இன்னமும் தெருக்கூத்து கலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் படம் இயக்கும் நேரத்தில் நாம் பார்த்து பழக்கப்பட்ட நமது கதையை சொல்லலாம் என்று தோன்றியது. அதனால் தான் இப்படிப்பட்ட கதையைத் தேர்வு செய்தேன். தெருக்கூத்து கலைஞர்கள் பற்றி சொல்லப்பட வேண்டிய விசயத்தைத்தான் இதில் சொல்லியிருக்கிறேன்.

ஆண் கலைஞர்கள் பெண் வேடம் போடும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அதிகம். அவர்களுடைய சொந்த ஊரிலேயே அவர்கள் கேலி கிண்டலுக்கு ஆளாவார்கள். கலை நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றாலும் அங்கேயும் அவர்கள் அவமானத்தை சந்திக்கக வேண்டியிருக்கும். இதனால், பலர் மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய இத்தகைய பிரச்சனையைத் தான் ‘ஜமா’ யதார்த்தமாகவும், சினிமாவுக்கான மொழியிலும் பேசுகிறது.

’ஜமா’ என்பது தெருக்கூத்து கலைஞர்களின் குழுவைக் குறிக்கும் சொல். கதை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு தெருக்கூத்து ஜமாவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து நகர்வது போல் அமைக்கப்பட்டிருக்கும்.

நான் நடிகனாக வேண்டும் என்று தான் முயற்சித்துக் கொண்டிருந்தேன். பல வருடங்களாக சிறு சிறு வேடங்களிலும் நடித்து வந்தேன், அதே சமயம் உதவி இயக்குநராகவும் பணியாற்றி வந்தேன். இந்தக் கதையை எழுதி முடித்த பிறகு என் நண்பர்களைக் கூட இயக்குநராக்கி இந்த படத்தை எடுத்திருக்கலாம். ஆனால், நான் பார்த்த ஒரு வாழ்க்கையை, நானே இயக்கினால் தான் சரியாக வரும் என்று தோன்றியது. அதனால் தான் இயக்கவும் செய்தேன்.

நான் தயாரிப்பாளர்களிடம் கதையைச் சொன்ன போது அவர்கள் புரிந்துகொண்டார்கள். அவர்களுக்கு சினிமா ஞானம் என்பது மிகவும் அதிகமாக இருக்கிறது. ‘கூழாங்கல்’ போன்ற ஒரு படத்தைப் புரிந்து தயாரித்திருப்பவர்கள், என் படத்தை நிச்சயம் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது, அதனால் தான் அவர்களை நான் அனுகினேன், அவர்களும் இந்தக் கதையை நிச்சயம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் எனக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்து, ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்.

சேத்தன் சார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று என் தந்தைதான் சொன்னார். அதன்படி அவர் பற்றி விசாரித்த போது ’விடாது கருப்பு’ தொடரில் அவர் வேடம் பற்றி நண்பர்கள் சொன்னார்கள். அவரிடம் நான் இயக்கிய பைலட் வீடியோ ஒன்றை காட்டினேன். அதைப் பார்த்துவிட்டு அவர் சம்மதம் தெரிவித்ததோடு, கூத்து வாத்தியாரிடம் சுமார் 5 நாட்கள் பயிற்சி எடுத்துக்கொண்டார். ஜமாவின் வாத்தியாராக அவர் நடித்திருக்கிறார். இப்போது படத்தை பார்க்கும் போது, இந்த வேடத்தில் வேறு யாராவது நடித்திருந்தால் அது சரியாக இருந்திருக்காது, என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு அவரது நடிப்பு கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

இப்போதைக்கு தெருக்கூத்து கலை மற்றும் கலைஞர்களின் வாழ்வியல் படத்தை புரிந்துகொண்டு அதற்கான இசையை கொடுக்கக் கூடியவர் இளையராஜா சார் மட்டும் தான், அதனால் தான் அவர் இசையமைக்க வேண்டும் என்று விரும்பினேன். அவரை அணுகும் போது நான் எடுத்த பைலட் வீடியோவை தான் காண்பித்தேன். அவர் அதை பார்த்துவிட்டு உடனே சம்மதம் சொல்லிவிட்டார். அதன் பிறகு நான் யார் ?, யாரிடம் பணியாற்றினேன் ? என்று எதையும் கேட்கவில்லை. அவர் இந்த படத்திற்கான இசை எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து பணியாற்றத் தொடங்கிவிட்டார்.

படத்தில் இறுதியில் இடம்பெறக் கூடிய ஒரு பாடலை உருவாக்க அவரிடம் சில ஐடியாக்களை சொன்னேன், அப்போது அவர் “இந்த பாடலை சினிமா பாணியில் எடுக்காமல், தெருக்கூத்து பாணியில் எடுக்கலாம் என்று சொன்னதோடு, இதில், வழக்கமான இசைக்கலைஞர்கள் அல்லாமல், தெருக்கூத்து கலைஞர்களையே பயன்படுத்தினால் தான் நன்றாக இருக்கும், என்று கூறி அவர்கள் மூலமாகவே பாடலை ஒலிப்பதிவு செய்தார். தெருக்கூத்து கலைஞர்கள் ஆயிரம் பேர் முன்னாடி வாசித்து பாடுவதை எளிதாக பார்ப்பார்கள். ஆனால், அவர்களை ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் வைத்து வாசிக்க சொன்னாலோ அல்லது பாட சொன்னாலோ பயந்துவிடுகிறார்கள். பைலட் வீடியோ எடுக்கும் போது இது எனக்கு சவாலாக இருந்தது. அதனால் தான் படம் எடுக்கும் போது தெருக்கூத்து காட்சிகளை நேரடியாக ஒலிப்பதிவு செய்தோம்.

 

தெருக்கூத்து கலைஞர்கள் பற்றி சொல்லப்பட வேண்டிய பிரச்சனைகள் பற்றி படம் பேசினாலும், இது வெறும் கலைப்படைப்பாக மட்டுமே இருக்காது. அந்த விசயங்களை ஒரு ஜனரஞ்சகமான கதையோடு சொல்லும் படமாகவும், அந்த கதையில் மக்கள் எதிர்பார்க்கும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படமாகவும் இருக்கும். பெண் வேடம் போடும் ஆண்களுக்கு ஜமாவின் எந்தவித அங்கீகாரமும் இருக்காது. அவர்களை யாரும் நம்ப மாட்டார்கள். சொல்ல போனால் அவர்களால் இறுதிவரை வாத்தியார் ஆக முடியாது, என்ற நிலை தான் இருக்கிறது. அப்படி ஒரு நிலையை மாற்றுவதற்கான முயற்சி தான் இந்த படம்,” என்றார்.

நடிகர் சேத்தன் பேசுகையில்,

‘விடுதலை’ படத்தைப் பார்த்துவிட்டுத்தான் என்னை இந்தப் படத்தில் நடிக்க வைக்க அணுகினார்கள். அவர் என்னிடம் கதை சொல்வதற்கு முன்பு, இந்தக் கதை பற்றி பைலட் வீடியோ ஒன்றை எனக்கு அனுப்பினார். அந்த வீடியோ பார்த்ததும் இது சாதாரண வேடம் இல்லை என்பதை புரிந்துகொண்டேன். அதற்காகத்தான் கூத்து வாத்தியாரிடம் முறையாக பயிற்சி எடுத்துக்கொண்டதோடு, படப்பிடிப்பு தொடங்கும் சில நாட்களுக்கு முன்பாக படப்பிடிப்பு நடக்கும் கிராமத்திற்குச் சென்று, தெருக்கூத்து கலைஞர்களுடன் பழகி, சில நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன். நிச்சயமாக இந்தப் படம் என் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்,” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் பேசுகையில்,

‘கூழாங்கல்’ போன்று ‘ஜமா’ படமும் சிறப்பான, மக்களுக்கான படமாக அமைந்திருக்கிறது. நயன்தாரா மூலம் முந்தைய படத்திற்கு ஒரு அடையாளம் கிடைத்தது. அதுபோல் இந்த படத்தையும் மற்றவர்களிடம் கொடுக்க நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்களே நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். ‘கூழாங்கல்’ படத்தைத் திரையரங்குகளில் வெளியிடத்தான் முயற்சித்தோம், ஆனால் அது முடியாமல் போய்விட்டது. ஆனால், இந்தப் படத்தை நிச்சயம் திரையரங்குகளில் தான் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். காரணம், இந்தப் படத்தை மக்கள் பார்க்க வேண்டும், இந்த படம் மக்களை சென்றடைந்து, கமர்ஷியலாகவும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். படமும் அதற்கேற்றவாறு தான் இருக்கிறது,” என்றார்.

ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் நாளை ஜுலை 19ம் தேதி வெளியாகிறது.