கோட் படத்தின் கதை இதுதானா..?

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தனது 68வது படமான கோட் (GOAT) படத்தில் நடித்து வருகிறார்.

வெங்கட் பிரபு மற்றும் விஜய் காம்போவில் உருவாகும் முதல் படம் இது என்பதால் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் உள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, படத்தில் விஜயுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார், மேலும் புதிய கீதை படத்திற்கு பிறகு 21 ஆண்டுகள் கழித்து விஜயின் படத்திற்கு இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.

சென்னை, ஹைதராபாத், கேரளா, மாஸ்க்கோ போன்ற இடங்களில் கோட் படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

செப்டம்பர் 5 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோட் படம் வெளியாகவுள்ள நிலையில், அடிக்கடி படத்தின் அப்டேட் கசிந்து வருகிறது. தற்போது கோட் படத்தின் கதையே இணையத்தில் கசிந்துள்ள சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தனை நாள் கோட் படம் டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது லீக்கான கதையின் படி பார்த்தால் இது டைம் டிராவல் படமே இல்லை என்று கூறப்படுகிறது.

2004 ஆம் ஆண்டு ரஷ்யாவின் மாஸ்க்கோ நகர மெட்ரோவில் தீவிரவாதி ஒருவன் உடம்பில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு வந்து வெடிக்கவைத்து தற்கொலை தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்களை பிடிப்பது தான் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் கதை என்று இணையத்தில் லீக் ஆகியுள்ளது.