வேட்டைக்காரி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இதில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், கவிப்பேரரசு வைரமுத்து, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பேரரசு தெரிவித்ததாவது..
‘ கவிஞர் வைரமுத்து இப்படத்தின் பாடலை வெளியிடும் போது நடிகை சஞ்சனா பாடலை உடன் சேர்ந்து பாடினார் சரியாக தமிழ் தெரியாத அவரே பாடும் போது கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்களுக்கு கிடைத்த வெற்றி.
என் முதல் படத்தின் பெயரை வைத்தவர் வைரமுத்து தான். ஏனென்றால் நாங்கள் வைத்த
படத்தின் பெயரை வேறு ஆட்கள் பதிவு செய்ததால் புது பெயரை வைக்க மிக யோசித்தோம். அப்போது திருப்பாச்சி அருவாள தீட்டிக் கிட்டு வாடா வாடா என்ற பாடல் ஒலித்தது. அதில் இருந்து திருப்பாச்சி என்ற பெயரை எடுத்துக் கொண்டேன்.
இப்போது ஒரு பாடல் வெற்றி பெற்று விடுகிறது, ஆனால் படம் வெளியாகி முடிவதற்குள்
பாடல் வெற்றியும் முடிந்து விடுகிறது. இசை ஒரு பாடலை வெற்றி அடைய வைத்து விடுகிறது. ஒரு பாடல் வெற்றி அடைய இசை காரணம். காலம் காலமாக ரசிகர்கள் மனதில் நிற்க வைப்பது பாடல் வரிகள் தான்.
அதற்கு கண்ணதாசன், வாலி உள்ளிட்டவர்களின் பாடல்கள் பல எடுத்துக்காட்டு.
புரட்சி தலைவர் கூட அவர் படங்கள், அரசியலில் வெற்றி அடைய மக்கள் நம்பிக்கை
வைக்க செய்தது பாடல் வரிகள் என்று அவரே சொல்லி உள்ளார். பாடல் வரிகள் கருத்துள்ளதாக, அர்த்தமுள்ளதாக இருந்தால் தான் நீண்ட நாள் நிற்கும். எனக்கு சோகம் வரும் போது நான் கேட்கும் பாடல் ‘ ஊரை தெரிஞ்சு கிட்டேன் உலகம் புரிஞ்சு கிட்டேன்’ பாடல் தான்
காட்சி, பாடல் வரிகள், இசை அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்து இருக்க வேண்டும். முதல் மரியாதை பாடல்களை கேட்டு எல்லாரும் ஐக்கியமாகி விட்டோம், காதல் ஓவியம் பாடலில் வாழ்ந்துள்ளோம். இசையுடன் பாடல் வரிகள் உயிர் கொடுத்து உள்ளது. இசை மட்டுமே போதாது. பாடல் வரிகள் வேண்டும், அதை தந்து சிறப்பாக செயலாற்றி
வருபவர் வைரமுத்து. கவிப்பேரரசு வைரமுத்து சென்னைக்கு வந்து 40 , 50 ஆண்டுகள் ஆனாலும் அவருக்குள், கிராமம் தான் உள்ளது, கிராமத்தில் பயன்படுத்தும் வார்த்தைகளை
இன்னும் பாடல்களில் பயன்படுத்தி வருகிறார் ‘ என பேரரசு தெரிவித்தார்.