‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என குடும்ப சென்டிமென்ட் கதைகளின் மூலம் வெற்றியை கொடுத்த பாண்டிராஜ் மீண்டும் அதே களத்தை கையில் எடுத்துள்ள படம் ‘தலைவன் தலைவி’.
இதில் விஜய் சேதுபதி, நித்யா மேனன்,’ பருத்திவீரன்’ சரவணன், தீபா, காளி வெங்கட், யோகி பாபு இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
மதுரை மேலூர் அருகே பரோட்டா கடையை குடும்பத்துடன் நடத்திக் கொண்டிருப்பவர் தான் விஜய் சேதுபதி( ஆகாச வீரன்). பக்கத்து ஊரைச் சேர்ந்த அரசியுடன் (நித்யா மேனன்) ஆகாசவீரனுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. காதலிக்கத் தொடங்கும் இருவரும் மனதளவில் ஈர்க்கப்படுகின்றனர். ஆனால் ஹீரோவின் பின்னணியை தெரிந்துகொள்ளும் ஹீரோயின் குடும்பத்தினர் இந்த வரன் வேண்டாம் என்று சொல்கின்றனர். இன்னொரு பக்கம் நாயகியை திருமணம் செய்தால் ஹீரோவின் பெற்றோர் எதிர்காலத்தில் மருமகளால் ஒதுக்கப்படுவார்கள் என்று ஜோசியக்காரர் சொல்வதை கேட்டு இந்த திருமணத்தை நிறுத்த நினைக்கின்றது ஹீரோ குடும்பம்.
ஆனால், இரு வீட்டாரின் எதிர்ப்பையும் தாண்டி ஹீரோயினை தன் வீட்டுக்கு அழைத்து வந்து திருமணம் செய்துகொள்கிறார் ஹீரோ. நன்றாக சென்று கொண்டிருக்கும் குடும்ப வாழ்க்கையில் மாமியார் – மருமகள் பிரச்சினை, நாத்தனார் பிரச்சினை என ஆரம்பிக்கும் விரிசல் போகப் போக பெரிதாகி ஒரு கட்டத்தில் கணவன் – மனைவி இருவரும் பிரியும் நிலைக்கு வந்துவிடுகிறது. இருவரும் மீண்டும் சேர்ந்தார்களா, இல்லையா என்பதை நான்-லீனியர் பாணியில் அலசுகிறது ‘தலைவன் தலைவி’.
வழக்கமான தமிழ் சினிமா கதை தான் என்றாலும் திரைக்கதையை பொறுத்தவரையில் சிறு சிறு மாற்றங்களை செய்திருப்பது தான் இந்த படத்தின் பெரிய பலம். படத்தின் முதல் பாதி சீரியல் போன்று உள்ளது. அதிலும் குறிப்பாக விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் எப்போது பார்த்தாலும் கற்றுக் கொண்டே இருப்பார்கள். ஆனால் படத்தின் இரண்டாம் பாதி காதல் நகைச்சுவை ஆக்சன் குடும்பத் தகராறு என கலகலவென்று செல்கிறது.
விஜய் சேதுபதி நித்யா மேனனின் நடிப்பை விட செம்பன் வினோத் நடிப்பு தூக்களாக இருக்கிறது. யோகி பாபுவின் காமெடி சீன்ஸ் அட்டகாசம். மேலும் மற்ற நட்சத்திரங்களில் நடிப்பை நன்றாக வெளிக்காட்டி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.
சந்தோஷ் நாராயணனின் இசை ஓரளவுக்கு பலம். சுகுமாரின் ஒளிப்பதிவு சுமார் ரகம். இந்தப் படத்தை எடிட்டர் பிரதீப் ராதாவுக்கு சிறப்பு பாராட்டுகள். ஏனெனில் ஒரு சாதாரண கதையை நான் லீனியர் ஸ்டைலில் இயக்குனர் எடுக்க நினைக்கும், கனவிற்கு உயிரூட்டும் விதமாக எடிட் செய்திருக்கிறார்.
எப்பொழுதுமே குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாண்டிராஜ், இந்த படத்திலும் குடும்ப உறவுகளை வைத்து படம் எடுக்கும் முயற்சித்திருப்பது அருமை. கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களை போன்றே இந்தப் படமும் இருந்தாலும், இந்த படத்தில் தனித்துவமாக அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு நெகட்டிவ் குணம் உள்ளது என்று கூறியிருப்பது மிகவும் சிறப்பு. இரண்டாம் பாதியில் நிறைய மெனக்கிட்டு கவனம் செலுத்தி இருந்த பாண்டியராஜ் முதல் பாதியிலும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஆக மொத்தத்தில் தலைவன் தலைவி குடும்பத்தோடு பார்க்கக் கூடிய ஜனரஞ்சகமான படம்.