குபேரா திரைவிமர்சனம்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, சுனைனா, கே.பாக்யராஜ், ஜிம் சர்பு இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில்
வெளியாகி இருக்கும் படம்.

கதைப்படி ஆழ்கடலில் இந்தியாவின் வளர்ச்சியே மிகப்பெரும் செல்வந்தர்களாக ஆகும் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த எண்ணெய் கம்பெனிக்கு நானே முழு உரிமையாளராக இருக்க வேண்டும் என்று ஜிம் சர்பு ஆசைப்படுகிறார். அதற்காக மத்திய மந்திரிகள் பலருக்கு ஒரு லட்சம் கோடி வரையிலும் பணம் பட்டுவாடா செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதற்காக அவர் ஒரு ஆளை தேர்ந்தெடுக்கிறார். அவர்தான் நாகர்ஜுனா. நேர்மையான சிபிஐ அதிகாரியான நாகார்ஜுனா செய்யாத குற்றத்திற்காக ஜெயிலில் இருக்கிறார். பொலிட்டிக்கல் பவருடன் மும்பையில் பெரிய தொழிலதிபராக இருக்கும் ஜிம் சர்பு, சிறையில் இருந்து நாகார்ஜுனாவை விடுவிக்கிறார். அதற்கு கைமாறாக தன்னிடம் உள்ள 50 ஆயிரம் கோடி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி தரும்படி சொல்கிறார். இதற்காக நாகார்ஜுனா ஒரு திட்டம் போட்டு வெவ்வேறு இடங்களில் இருந்து தனுஷ் உள்ளிட்ட 4 பிச்சைக்காரர்களை அழைத்து வந்து, அவர்களுக்கு போலியாக ஆவணங்களை தயார் செய்து அவர்கள் பெயரில் சுவிஸ் பேங்கில் கணக்கு தொடங்கி கருப்பு பணத்தை ட்ரான்ஸ்பர் செய்கிறார். அதன் பிறகு மீண்டும் அந்தப் பணத்தை இங்கு வெள்ளையாக மாற்றிவிட்டு ஒவ்வொருவராக தீர்த்து கட்டுகிறார். அதிலிருந்து தப்பிக்கும் தனுஷுக்கு ராஷ்மிகா உதவி செய்கிறார். ஒருபுறம் நாகார்ஜுனா ஆட்கள் தனுஷை வலைவீசி தேடத் தொடங்குகின்றனர். அவர்களிடமிருந்து தப்பித்தாரா? பத்தாயிரம் கோடியுடன் ஓடிய தனுஷ் முடிவில் குபேரர் ஆனாரா? என்பதே படத்தின் மீதி கதை.

தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மற்றும் பல நட்சத்திரங்களின் நடிப்பு அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தது. அதிலும் குறிப்பாக பிச்சைக்காரர்களில் ஒருவராக வரும் அந்த பிரசவப் பெண்ணின் நடிப்பு அருமையோ அருமை. குறிப்பாக தனுஷின் அவரது பாடி லாங்குவேஜ் பல சீன்களை எலிவேட் செய்கிறது. அவருடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார் நாகார்ஜுனா. ஒருவித கிரே ஷேடு கலந்த கேரக்டரில் அழகான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் நடுவில் பேலன்ஸிங்கான ஆக்டிங்கில் ஸ்கோர் செய்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. வில்லனாக நடித்துள்ள பாலிவுட் நடிகர் ஜிம் சர்பு வில்லனுக்கு உண்டான நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

திரைக்கதையை பொருத்தவரையில் முதல் பாதி மிக மிக வேகமாக ஆரம்பித்தது, ஆனால் இடைவேளையில் கொஞ்சம் சறுக்கலாக இருந்தது. இதன் தொடர்ச்சியாகவே இரண்டாம் பாதி இருந்தாலும், இறுதிக் காட்சியில் நம்மை நாற்காலி முனையில் உட்கார வைத்து விடுகிறது.

இந்தப் படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் நச் நச் என்று உள்ளன. இன்றைய காலகட்டத்தில் பிச்சைக்காரர்களை நாம் எந்த மாதிரியான மனநிலையில் அணுகுகிறோம் என்பதை புட்டு புட்டாக வைக்கும் அளவிற்கு இந்த வசனங்கள் இடம் பெற்று இருப்பது தனி சிறப்பு.

இந்தப் படத்திற்கு இசையும் ஒளிப்பதிவும் மிகப்பெரிய பலம்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. 3 மணி நேர படத்தின் பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

நிகித் பொம்மியின் ஒளிப்பதிவில் ஹைதராபாத், திருப்பதி, மும்பை போன்ற நகரங்கள் அழகாக தெரிகின்றன.

இப்படத்தில் இயக்குனர் சேகர் கமுலாவை பற்றி பேசியே ஆக வேண்டும். பெரிய தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் செய்யும் ஊழல், வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை கோடிக்கணக்கில் முதலீடு செய்து அதை வெள்ளையாக மாற்றுவது போன்ற கரண்ட் மேட்டர்களில் கை வைத்திருக்கார் சேகர் கம்முலா. அரசியல் பலத்துடன் பண பலத்தை வைத்துக்கொண்டு அவர்கள் செய்யும் தில்லாலங்கடி வேலைகளை சரியான திரைக்கதையுடன் படமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

ஆக மொத்தத்தில் தனுஷின் குபேரா படம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய சமூக படம்.