ஒரு படகும் கவிழவில்லை. கந்தாரா பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்!

ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கி வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் காந்தாரா. இதன் இரண்டாம் பாகம் தற்போது படப்பிடிப்பில் இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் கர்நாடகாவின் சிவமொக்காவில் உள்ள மாணி அணை நீர்த்தேக்கப் பகுதியில் இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாகவும், ரிஷப் ஷெட்டி உள்ளிட்டோர் நீந்தி தப்பித்து வந்ததாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவன நிர்வாகி ஆதர்ஷ் பேசியபோது “நாங்கள் சென்ற எந்த படகும் கவிழ்ந்து விபத்தாகவில்லை. படக்குழுவினர் பத்திரமாக மாணி நீர்த்தேக்கத்தின் அருகே படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஒரு பெரிய படகு போல செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. மழை காரணமாக அதன் மேல் பகுதி கவிழ்ந்தது. ஆனால் அந்த நேரத்தில் அங்கு நடிகர்களோ, வேறு யாருமோ அங்கே இல்லை.

வனத்துறை, உள்ளூர் காவல்துறை என அனைவரிடமும் உரிய அனுமதி பெற்று, தகுந்த பாதுகாப்புகளுடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. எனவே ஒவ்வொரு வதந்தியையும் காந்தாரா படத்துடன் இணைப்பதை நிறுத்துங்கள். ரசிகர்களுக்கு சிறந்த சினிமா அனுபவத்தை தர நாங்கள் உழைத்து வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.