இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் யார் தெரியுமா?

இந்தியாவின் பணக்கார இயக்குநர் யார்? அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர் யார்? என்ற விவாதம் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது.

ஆனால், தற்போது இந்த கேள்விகளுக்கான பதில் கிடைத்திருக்கிறது. ஆம், அவர் வேறு யாருமில்லை. இயக்குநர் SS ராஜமெளலிதான்.

நான் ஈ படத்தின் மூலம் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த ராஜமெளலி, பாகுபலி, ஆர்.ஆர். ஆர் ஆகிய திரைப்படங்களில் உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார். இவருக்கு சல்மான் கான், ஷாருக்கான் போன்ற நடிகர்களை விட அதிக சம்பளம் கிடைக்கிறதாம்.

எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்?

இப்போது உங்களுக்கு அவர் ஒரு படத்துக்கு எவ்வளவு வாங்குகிறார் என்ற கேள்வி வரும். ஐஎம்டிபி படி வெளியிட்ட தகவலின் படி, எஸ்.எஸ்.ராஜமௌலி அவர் இயக்கும் ஒவ்வொரு படத்திற்கும் சுமார் 200 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. இதில் அவரது முன்பணம், லாபப் பங்கு மற்றும் உரிமைகள் விற்பனைக்கான போனஸ் ஆகியவை அடங்கும். படத்தின் வெற்றியைப் பொறுத்து அவரது பங்கு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ராஜமௌலி தன்னுடைய சம்பளத்தை 200 கோடியாக உயர்த்தியதாக சொல்லப்படுகிறது. ஒரு படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம் வாங்கியதன் மூலம் நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் திரையுலக பிரபலங்களில் ஒருவராக ராஜமௌலி மாறியுள்ளார். உண்மையில், ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் போன்ற இந்தியாவின் பணக்கார சூப்பர் ஸ்டார்கள் ஒரு படத்திற்கு ரூ .150-180 கோடி சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.

இந்தியில் கோலுச்சிய பாகுபலி

அப்படி பார்த்தால் இவர்களை விட ராஜமௌலியின் சம்பளம் அதிகமாக இருக்கிறது. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான ஆர். ஆர். ஆர் திரைப்படத்தில் ஜூனியர் என். டி.ஆர். ராம்சரண் ஆகிய பெரிய நட்சத்திரங்கள் இருந்த போதும் அந்தப்படம் ராஜமெளலியின் படம் என்றே விளம்பரப்படுத்தப்பட்டது.

அதற்கு காரணம், அவர் முன்னதாக இயக்கிய பாகுபலி. அந்தப்படம் இந்தியா முழுவதிலும் அவரது பெயரை கொண்டு போய் சேர்த்தது. வட இந்தியாவில் ஷாருக்கானின் பதான் படம் வெளியாகும் வரை கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக பாகுபலி படம் இந்தியில் அதிகம் வசூல் செய்த படமாக இருந்தது.

அதேபோல், RRR படத்தின் ஹிந்தி வெர்ஷனும் 270 கோடிக்கு மேல் வசூலித்தது. ராஜமௌலியுடன் ஒப்பீட்ட அளவில் பார்க்கும் போது வேறு எந்த இயக்குநரும் அவர் அருகில் வரமுடியவில்லை காரணம், இந்தியாவில் மற்ற இயக்குநர்கள் வாங்கும் சம்பளத்தை விட அவர் 2 மடங்கு சம்பளம் வாங்குகிறார்.

மற்ற இயக்குநர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள்?

சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் பிரசாந்த் நீல் போன்ற இயக்குநர்கள் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு 90 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. இந்தியில் பிரபல இயக்குநராக வலம் வரும் ராஜ்குமார் ஹிரானி படம் ஒன்றிற்கு 80 கோடி வாங்குவதாக சொல்லப்படுகிறது.

இவர்களுடன் சுகுமார், சஞ்சய் லீலா பன்சாலி, லோகேஷ் கனகராஜ், சித்தார்த் ஆனந்த் போன்ற இயக்குநர்களும் பெரும் தொகையை சம்பளமாக வாங்கி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு படத்திற்கு 40 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

வழக்கமாக சொந்தமாக படங்களை தயாரிக்கும் கரண் ஜோஹர், ரோஹித் ஷெட்டி போன்ற இந்தி இயக்குனர்கள் லாப பகிர்வு மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள்.

எஸ்.எஸ்.ராஜமௌலியின் புதிய படம் ‘எஸ்.எஸ்.எம்.பி.29’. இந்தப்படத்தில் மகேஷ் பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பான்-இந்தியா திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்தப்படம் 2027 இல் திரைக்கு வர உள்ளது.