பரமசிவன் பாத்திமா – திரைவிமர்சனம்

விமல், சாயாதேவி, எம் எஸ் பாஸ்கர், ஸ்ரீ ரஞ்சனி, கூல் சுரேஷ் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.

இரண்டு ஊர்களுக்கு இடையே எப்பொழுதுமே மோதல் கலவரம் மதப் பிரச்சினை உண்டு. இந்நிலையில் திருமணத்திற்கு ஒரு நாள் முன்பாக ஒரு மதத்தைச் சார்ந்த ஒருவன் கொல்லப்பட்டு இன்னொரு கோவிலில் தூக்கி வீசப்படுகிறான். இதனால் அந்த இரு ஊர்களுக்குள்ளே பதட்டங்கள் எழுதுவதால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு அந்த ஊருக்கு போலீஸ் குவிக்கப்படுகிறது. அந்த கொலை பற்றிய விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் புதிது புதிதாக சில அமானுஷ்யமான விஷயங்கள் அங்கு நடப்பது அந்த போலீசால் உணர முடிகிறது. அதே வேளையில் இன்னொரு மதத்தைச் சார்ந்தவருக்கும் அடுத்த நாள் திருமணத்திற்கு முன்பாக கொலை செய்யப்பட்டு சர்ச் வாசலில் போடப்படுகிறார். இதனால் பதற்றம் அதிகமாகிறது. ஒரு கட்டத்தில் போலீஸ் கொலை செய்த அந்த இருவரையும் நெருங்கும் வேலையில் தான் அவர்களுக்கு தெரிகிறது, இது அமானுஷ்யமான இருவரால் செய்யப்படும் கொலை என்று. இந்த அமானுஷ்ய உடல்களான விமல் சாயாதேவி ஏன் கொல்லப்பட்டார்கள், இந்த ஊரில் இவ்வளவு பெரிய கலவரம் நிலவுவதற்கு காரணம் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை.

கதை எவ்வளவு அழகாக இருந்தாலும் அதன் திரைக்கதை தான் மிகவும் முக்கிய வடிவம் கொடுக்கும். இந்தப் படத்தில் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் மிகவும் அருமையாக இருந்தாலும் திரைக்கதை வடிவம் மிகவும் சொதப்பலாகவே உள்ளன. அதிலும் முதல் பாதி எந்த ஒரு ஈர்ப்பும் இல்லாமல் இருக்கிறது. இரண்டாம் பாதி நன்றாக சென்று கொண்டிருந்த வேளையில் கிளைமாக்ஸ் காட்சிகள் வழக்கம் போல சொதப்பலாகி விடுகின்றன.

நடிப்பை பொறுத்தவரை அனைவரின் நடிப்பும் செயற்கை தனமாகவே உள்ளன அதிலும் குறிப்பாக எம்.எஸ். பாஸ்கர் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் தான் செய்திருக்கிறார். ஆறுதலாக நடிகை சாயாதேவியின் நடிப்பு பெண்ணியம் பற்றி பேசும் அவரின் திமிரு இந்த படத்திற்கு ஒரு மிகப்பெரிய பலம்.

ஒளிப்பதிவாளர் கொடைக்கானல் பகுதியை மிகவும் அழகாகவும் ரம்யமாகவும் காண்பித்து இருக்கிறார்.

இசையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். இசை ஓரளவு சுமாராகவே உள்ளது.

இந்த படத்தின் இயக்குனரான இசக்கி கார்வண்ணன் ஒரு நல்ல கதை கருவை எடுத்து அதை திரைக்கதையாகுவதில் கோட்டை விட்டு இருக்கிறார் என்று கூறலாம். அதைவிட பெரிய கொடுமை அவர் போலீசாக நடித்து நம்மை இரிடேட் செய்வதுதான். அதற்குப் பதிலாக வேறு ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை கொடுத்திருந்திருக்கலாம். அவருக்கு ஒத்து ஊதுவதாக வரும் காதல் சுகமார் மற்றும் ஆறு பாலாவின் நகைச்சுவையும் பெரிதாக சிரிப்பை ஏற்படுத்தவில்லை.

ஆக மொத்தத்தில் பரமசிவன் பாத்திமா மதமாற்றத்தை பற்றி கூறும் ஒரு அற்புதமான கதையாக இருந்தாலும் திரைக்கதையில் கோட்டை விட்டதால் சுமார் ரகத்தில் வந்து நிற்கிறது.