நரி வேட்டை திரைவிமர்சனம்

நடிகர் மற்றும் இயக்குனர் சேரன், சுராஜ் வெஞ்சரமூடு, டொவினோ தாமஸ் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் மலையாளத்திலிருந்து தமிழ் டப்பிங்கில் வெளியாகியிருக்கும் படம் நரிவேட்டை.

கதையின் படி ஊதாரியான டொவினோ தாமஸ் சிறுவயதிலிருந்தே தான் காதலித்த காதலிக்காக வேறு வழியே இல்லாமல் போலீஸ் கான்ஸ்டபிள் வேலைக்கு செல்கிறார். ஆனால் அவர் விருப்பமே இல்லாமல் ஆதிவாசியான பழங்குடியின மக்களுக்கு நிலவுடைமைக்காக போராடும் அந்த கூட்டத்திற்காக பந்தகோஸ்துக்கு செல்லும்போது, அங்கு சில பல பிரச்சனைகளை சந்திக்கிறார். அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே உதவி செய்த மூத்த காவல் அதிகாரியான சுராஜ் வஞ்சரமூடு திடீரென்று உயிர் இழக்கிறார். இதனால் அவருக்கு அநியாயம் இழைக்கப்படுகிறது. அந்த அநியாயத்தை தட்டி கேட்பதற்காக ஏசிபியாக வரும் சேரனிடம், அனைத்து உண்மைகளையும் சொல்கிறார். ஆனால் இதற்கு எல்லாம் காரணம் இன்சார்ஜ் ஆக வரும் சேரன்தான் என்று அவர் உணரும்போது, அப்பொழுது அவர் போலீஸ்க்காக நிற்கிறாரா அல்லது ஆதி பழங்குடியினருக்காக நிற்கிறாரா என்பது தான் படத்தின் கதை கரு.

கதை எவ்வளவு அழுத்தமான கதையாக இருந்தாலும் முதல் பாதி திரைக்கதை மிகவும் மெதுவாகவே செல்கிறது. இது தமிழ் ரசிகர்களுக்கு அவ்வளவாக பிடிக்காது என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆனால் முதல் பாதியில் ஆமை வேகத்தில் செல்லும் இந்தத் திரைக்கதை தான் இரண்டாம் பாதியில் நமக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக ரசிக்க வைக்கிறது என்பது அடிப்படை உண்மை. மேலும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அடிக்கோடிட்டது படத்தில் இறுதிக் காட்சியை மேலும் வலு சேர்த்து இருக்கிறது என்றே கூறலாம்.

படத்தில் டொவினோ தாமஸ்ன் நடிப்பு அளப்பரியது என்றாலும், நடிகர் சேரனின் நடிப்பை இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் எந்த ஒரு இயக்குனரும் பயன்படுத்தாத அளவிற்கு இந்த படத்தின் இயக்குனர் பயன்படுத்தியிருக்கிறார். அதிலும் குறிப்பாக ஆதிவாசியினருக்கும் போலீசுக்கும் இடையே நடக்கும் அந்தச் சின்ன சின்ன பிரச்சனைகளிலும் சேரனை நடிக்க வைத்திருக்கும் விதம் மிக மிக அருமை.

மலையாள படம் என்றாலே ஒளிப்பதிவு மிகவும் நன்றாகத் தான் இருக்கும். அதற்கு காரணம் அந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும் ஸ்தலங்கள் மட்டுமே. ஆனாலும் அதையும் தாண்டி இந்த படத்தின் திரைக்கதை மற்றும் இசை மிகப்பெரிய பலத்தை கொடுத்திருக்கின்றன. இந்தப் படத்தில் இயக்குனர் ஒரு சாதாரண திரைக்கதையை எடுத்து ஒரு கதாபாத்திரத்தில் எதிர்மறை வடிவமைப்பு அதே மாதிரி நேர்மறை வடிவமைப்பு இரண்டையும் சுட்டிக்காட்டி இருக்கிறார். உளவியல் ரீதியாக இது மாதிரியான படங்கள் வருவது மிகவும் அரிது. அதன் காரணமாக இயக்குனருக்கு மிகப்பெரிய பாராட்டுகளை கொடுக்கலாம்.

ஆக மொத்தத்தில் நரி வேட்டை படம் ஒரு தரமான படம். ஆனாலும் என்ன திரைக்கதை மிகவும் மெதுவாக நகரும் என்பதால் ரசிகர்கள் பொறுமையாக பார்க்க வேண்டிய கட்டாயத்தில் அமர்த்தப்படுவார்கள். அது மட்டுமில்லாமல் சேரனின் நடிப்பை நீங்கள் மிகவும் வித்தியாசமாக ரசிக்கலாம்.