ராஜ்கிரன், சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, கீதா கைலாசம் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.
பத்து வருடங்களாக அக்கா சுவாசிகாவுக்கு குழந்தை பிறக்கவில்லை என்று பல கோயில்களில் சென்று வரும் சூரிக்கு இறுதியாக அக்கா சுவாசிக்காவுக்கு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை மாமா சூரியுடன் ரொம்பவே ஒட்டி பழகுகிறது. இது ஒரு புறம் இருக்க ஐஸ்வர்யா லட்சுமிக்கும் சூரிக்கும் காதல் திருமணம் நடக்கிறது. ஆனால் அவர்களுக்குள் முதலிரவு முதற்கொண்டு எதுவுமே நடக்க முடியவில்லை காரணம் எப்பொழுதுமே அந்த சிறுவன் மாமன் கூடவே இருப்பதுதான் இதனால் குடும்பத்தில் உறவுகளில் நிறைய பிரச்சனை வருகிறது. நிறைய விரிசில் வருகிறது. இதையெல்லாம் எப்படி சமாளித்தார்கள் அந்த குழந்தைக்கு எப்படி புரிய வைத்தார்கள் என்பது தான் படத்தின் கதை.
நடிகராக சூரி மற்ற படங்களில் ஜொலித்ததை விட இந்த படத்தில் அவருடைய ஜொலிப்பு மிகவும் குறைவுதான் ஐஸ்வர்யா லட்சுமியின் நடிப்பு அருமை. சுவாசிகாவின் நடிப்பு இன்னும் அருமை. ராஜ்கிரன் விஜி கீதா கைலாசம் பால சரவணன் என அனைத்து நட்சத்திரங்களின் நடிப்பும் உச்சபட்சம். அதிலும் பாபா பாஸ்கரின் நடிப்பு மிக மிக எதார்த்தம்.
படத்தின் ஆரம்பத்தில் திரைக்கதை மிக வேகமாக நகரும் போது படம் எதையோ சொல்ல வருகிறது என்ற எண்ணத்தை கொடுத்தது.. ஆனால் அது போக போக தொய்வடைந்து பத்து காட்சிகளுக்குப் பிறகு மறுபடியும் அந்த படத்தில் ஒரு உண்மை தன்மை வெளிப்படுகிறது. ஒரு எதார்த்தம் வெளிப்படுகிறது. ஆனால் மீண்டும் ஒரு தொய்வை கொடுக்கிறது. இப்படியே படம் முழுதும் திரைக்கதையில் ஏற்றம் இறக்கங்களோடு செல்கிறது படம் என்பதுதான் உண்மை.
படத்தின் வசனத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம், அதேபோல் ராஜ்கிரனுக்கும் விஜி சந்திரசேகருக்கும் இடையிலான காதலை போற்றி இருக்கும் விதம் அருமை.
ஒளிப்பதிவு மிக அருமையாக இருந்தாலும் பாடல்கள் கொஞ்சம் சுமார் ரகம் தான்.
இந்தப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் ஏற்கனவே விலங்கு என்ற வெப் சீரிஸ் எடுத்து அனைவருக்கும் பிரபலமானவர். அவரிடம் இருந்து ஒரு எமோஷனல் ஆன கதையை எதிர்பார்த்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால் திரைக்கதையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் மாமன் படம் அடுத்த பாசமலர் படம் போலே இருந்திருக்கும் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் அளவுக்கு அதிகமான திணிக்கப்பட்ட சோக காட்சிகளை தவிர்த்து இருந்திருக்கலாம்.
ஆக மொத்தத்தில் மாமன் படம் அளவுக்கு அதிகமான சோக காட்சிகள் நிறைந்த குடும்ப படம்.