திருப்பூரில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாமன் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட சூரி திடீரென்று கண்கலங்கினார்.
அதில் அவர் பேசும் பொழுது, ‘நான் பட்ட கஷ்டத்திற்கு இதைவிட பெரிய மரியாதை கிடைக்கவே கிடைக்காது. திருப்பூர் சுப்ரமணியம் அண்ணனுடைய திரையரங்கிற்குள் நுழைந்தவுடன் எனக்கு பழைய நினைவுகள் அனைத்தும் நினைவுக்கு வந்துவிட்டன. இந்த இடத்தில் தானே நாம் அலைந்து இருக்கிறோம் என்று தோன்றியது.
இங்கு நான் நடக்காத இடமே கிடையாது. நான் இங்கே வந்த பொழுது, என்னை சிவப்பு கம்பளம் விரித்து அழைத்து வந்த போது, நீங்கள் எல்லோரும் கைதட்டி விசில் அடித்து, மேடையில் ஏற்றி என்னை அமர வைத்தது போல இருந்தது. இது உன்னுடைய மேடை இந்த மேடையில் நீ நிற்காமல் வேறு யார் நிற்பார்; நீ நில்லுடா.. நாங்கள் இருக்கிறோம் என்று சொல்வது போல இருந்தது என்று பேசிக்கொண்டிருக்கும் போதே சூரி கண்கலங்கி விட்டார்.
1993ம் ஆண்டு யாரிடமும் சொல்லாமல் நானும் என்னுடைய நண்பர்களும் திருப்பூருக்கு வேலைக்கு வந்தோம். அப்போது ஒரு நாளைக்கு எங்களுக்கு 20 ரூபாய் சம்பளம். 7 நாளைக்கு 140 ரூபாய் கிடைக்கும். அதில் 70 ரூபாயை செலவு செய்து விட்டு மீதி 70 ரூபாயை வீட்டிற்கு அனுப்புவேன். சில நேரங்களில் சாப்பாடு விஷயத்தில் செலவு கை மீறி சென்று விடும்.
அங்கு இருக்கக்கூடிய தனியார் பேக்கரி ஒன்றில் எல்லாமே நன்றாக இருக்கும். அந்த பேக்கரியில்தான் என்னுடைய பெரும்பான்மையான காசு செல்வாகும். அங்கு கிடைக்கும் தேங்காய் பன் அவ்வளவு சுவையாக இருக்கும்.
அப்போது அந்த தேங்காய் பன் ஒன்றேகால் ரூபாய். கடைக்கு டீ குடிக்க செல்லும் பொதே கையில் எவ்வளவு காசு இருக்கிறது; எத்தனை தேங்காய் பன்கள் சாப்பிடலாம் என்று எண்ணிக் கொண்டே தான் சொல்வேன். ஆனால், அங்கு சென்றவுடன் வேண்டாம் வெறும் டீ மட்டும் குடித்து விட்டு சென்று விடலாம் என்று நினைப்பேன்; ஆனால் என்னுடைய தேங்காய் பன் நண்பன் சாப்பிடுவான். என்னை சாப்பிடவில்லையா என்று கேட்பான்;
அதற்கு நான் இங்கு தினமும் மூன்று வேளை வருவோம்; அப்படி என்றால் கிட்டத்தட்ட நான்கு ரூபாய் மேல் செலவாகிவிடும். அதனால் வேண்டாம் என்பேன். ஆனால், என்னுடன் வரும் நண்பன் வழியிலேயே பன்னை சாப்பிட்டுக்கொண்டே வந்து கொண்டே இருப்பான்; பன்னின் வாசம் என்னை இழுக்கும். உடனே நான் முன்னோக்கி வேகமாக செல்வேன். கம்பெனியின் அருகில் வந்தவுடன் என்னால் பொறுக்க முடியாது; அடக்க முடியாமல் மீண்டும் அந்த பேக்கரிக்குச் சென்று 2 தேங்காய் பன்களை சாப்பிட்டு விட்டுதான் வருவேன்.
எல்லோருமே கஷ்டப்பட்டு தான் தனக்கான இடத்தை அடைந்திருக்கிறார்கள். நான் கஷ்டப்படும் பொழுது நான் வேலையை ஆரம்பித்த இடம் திருப்பூர் தான். எனக்கு வாழ்க்கையை கற்றுக் கொடுத்தது திருப்பூர் தான். இந்த மண் தான் எனக்கான போதி மரம் என்று நினைக்கிறேன். கேரளா போனால் மலையாளம், கர்நாடகா போனால் கன்னடம், மும்பை சென்றால் ஹிந்தி என்று ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொன்றை கற்றுக் கொள்ளலாம் என்று கூறுவார்கள். ஆனால் திருப்பூரில் மட்டும்தான் எல்லா மொழிகளையும் கற்றுக் கொள்ள முடியும்.
திருப்பூருக்கு சென்று வாழ முடியாதவன் எங்கும் சென்று வாழ முடியாது என்று கூறுவார்கள். தொழிலாளர்களால் மட்டுமே உயர்ந்த ஊர் என்றால் அது திருப்பூர் மட்டும் தான். உலகத்தில் இருக்கும் எல்லா நாட்டில் இருக்கக்கூடியவரும் நம்முடைய ஆடையை அணிந்து கொள்கிறான். நான் திருப்பூரில் வேலை செய்து அதன் பின்னர் சென்னைக்கு சென்று பல வேலைகள் செய்து, ஒரு கட்டத்தில் சினிமாவிற்கு சென்று கதையின் நாயகனாக மாறி, இன்று இந்த இடத்தில் என்னுடைய படத்திற்கான நிகழ்ச்சி நடக்கிறது பாருங்கள் என்று சொல்லும் போதே எமோஷனல் ஆனார் சூரி!