ஆந்திர துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் சமீபத்தில் கிராமப்புற வேலைவாய்ப்புக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது நாட்டில் மனச்சோர்வடைந்த இளைஞர்களைப் பற்றி, பவன் கல்யாண் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
மேலும் அவர் தனது குடும்பத்திற்கு வழங்கும் அதே ஆலோசனையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, வயல்களில் விவசாயம் செய்யுங்கள் என்றும் பசியை உணருங்கள் என்றும் இதன்மூலம் ஒருவருடைய மனச்சோர்வு குறையும் என்றும் கூறியிருக்கிறார்.
இந்த நிகழ்வில், பவன் கல்யாண் தனது குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் மனச்சோர்வடைந்ததாகக் கூறினால் எவ்வாறு அறிவுறுத்துகிறார் என்பது பற்றி பேசியிருந்தார்.
மேலும் விளக்கிய நடிகர் பவன் கல்யாண், “எனது குடும்பத்தில் உள்ள குழந்தைகள் தாங்கள் மனச்சோர்வடைந்திருப்பதாக என்னிடம் கூறும்போது, அதைச் சொல்வதை நிறுத்துமாறு நான் அவர்களிடம் கேட்டுக்கொள்வேன்.
முதலில் உணவு உண்பதை நிறுத்துங்கள். வெளியே சென்று வேலை செய்யுங்கள். குறிப்பாக, வயல்களில் இறங்கி விவசாயம் செய்யுங்கள். அது உங்களுக்கு பசியைத் தரும்; அப்போதுதான் நீங்கள் மனச்சோர்வை உணரமாட்டீர்கள். அதில் இருந்து வெளிவருவீர்கள்” என சொன்னதாக பொதுமேடையில் பவன் கல்யாண் கூறினார்.
மேலும், நாட்டின் இளைஞர்களுக்கும் இதே அறிவுரை தான் தன்னிடம் உள்ளது என்று கூறிய நடிகர் பவன் கல்யாண், “உண்மையில், இந்த நாட்டின் இளைஞர்கள் நன்றாக இருக்க வேண்டுமானால், கடினமாக உழைக்க வேண்டும். கடினமாக உழைக்கும் எவருக்கும் மனச்சோர்வு ஏற்பட வாய்ப்பில்லை என்பதை அவர்கள் உணரவேண்டும். தங்களுக்குத் தாங்களே எப்படி உணவளித்துக்கொள்ள வேண்டும் என்பதை யோசித்துக் கொண்டு இருக்கும் ஒருவர் மனச்சோர்வடைய வாய்ப்பே இல்லை. இளைஞர்கள் நினைப்பதெல்லாம் உணவு, உறக்கம் பற்றித்தான்” என பவன் கல்யாண் கூறியிருக்கிறார்.
மேலும் 2023ஆம் ஆண்டில்,நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பேச்சு நிகழ்ச்சியான ஆஹா, NBK With Unstoppable நிகழ்ச்சியில், பவன் கல்யாண், தனக்கு 17 வயதாக இருந்தபோது, தனது சகோதரர் சிரஞ்சீவியின் உரிமம் பெற்ற ரிவால்வரைப் பயன்படுத்தி, தனது உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பியது பற்றிக் கூறினார்.
அப்போது அந்த நிகழ்ச்சியில், நடிகர் பவன் கல்யாண், “தேர்வுகளின் அழுத்தம், எனது மனச்சோர்வை அதிகரித்தது. எனது மூத்த சகோதரர் நடிகர் சிரஞ்சீவி வீட்டில் இல்லாதபோது, அவரது உரிமம் பெற்ற ரிவால்வரைப் பயன்படுத்தி என் உயிரை மாய்த்துக்கொள்ள திட்டமிட்டது எனக்கு நினைவிருக்கிறது,” என்று நடிகர் பவன் கல்யாண் கூறினார்.
அதிர்ஷ்டவசமாக, நடிகர் பவன் கல்யாணின் மூத்த சகோதரர்களான சிரஞ்சீவி, நாகபாபு மற்றும் அண்ணி சுரேகா ஆகியோர் அவரைத் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர்.
அப்போது நடிகர் சிரஞ்சீவி தனது தம்பி பவன் கல்யாணிடம், “எனக்காக மட்டும் வாழ். நீ எதுவும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் தயவுசெய்து வாழு” எனச் சொன்னதாகவும், அதனால், நடிகர் பவன் கல்யாண் பின்னர் தனது வாழ்க்கையை வாழ முடிவுசெய்ததாகவும் கூறியிருக்கிறார்.
அதன்பின், நடிகர் பவன் கல்யாண் வாசிப்பு மற்றும் தற்காப்புக் கலைகளில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதேபோல், நேரம் கிடைக்கும்போதெல்லாம், நடிகர் பவன் கல்யாண், தன்னை விவசாயத்தில் ஈடுபடுத்திக்கொண்டார். மேலும் தன்னம்பிக்கையைப் பெற கர்நாடக இசையில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறார். அதை அடிக்கடி கேட்கவும் செய்திருக்கிறார்.