நடிகை சமந்தாவின் பிறந்தநாளுக்காக, அவருக்கு கோவில் கட்டிய ஆந்திராவின் தீவிரமான ரசிகர்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நிலையில், ஆந்திராவை சேர்ந்த ரசிகர் ஒருவர் சமந்தாவுக்கு கோவில் கட்டி சிலை வைத்துள்ளார்.

இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பானா காத்தாடி படததின் மூலம் அறிமுகமான சமந்தா, தொடர்ந்து விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தமிழ் மட்டுமல்லால், தெலுங்கு, இந்தி என இந்திய மொழிப்படங்களில் நடித்து வரும் சமந்தா, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். குறிப்பாக மற்ற நடிகைகளை விடவும், சமந்தாவுக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகமாக உள்ளது. அவரை சமூகவலைதளங்களில் பலர் ஃபாலோ செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சமந்தாவின் பிறந்த நாளான இன்று (ஏப்ரல் 28) ரசிகர்கள் பலரும் தங்கள் சமூகவலைதளங்களில் சமந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சமந்தா குறித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவரின் பிறந்த நாளில், ஒரு ரசிகரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சமந்தாவின் தீவிர ரசிகரான அவர், சமந்தாவுக்காக ஒரு கோயில் கட்டினார்.

ஆந்திராவின் பாபட்லா மாவட்டத்தின் அலபாடு கிராமத்தில் சந்தீப் என்ற நபர் சமந்தாவின் பெயரில் ஒரு கோவிலைக் கட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப், சமந்தாவை தனக்கு மிகவும் பிடிக்கும். அவர் செய்யும் சேவைத் திட்டங்களும் தனக்குப் பிடிக்கும், அதனால்தான் அவரது ரசிகராக மாறிவிட்டேன். மேலும், ஒவ்வொரு வருடமும் சமந்தாவின் பிறந்தநாளில் அனாதை இல்லங்களுக்கு உணவு தானம் செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.