பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், மோகன்லால் நடித்துள்ள ‘எல் 2 எம்புரான்’ திரைக்கு வரும் மார்ச் 27 அன்று நடிகர் விக்ரமின் ‘வீர தீர சூரன்’ திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
தற்போது ‘வீர தீர சூரன்’ பட புரோமோஷனில் இருக்கும் விக்ரமிடம் இந்த மோதல் குறித்து கேட்கப்பட்டது.
இது குறித்து பேசிய விக்ரம், ‘ எம்புரான் படத்துடனான மோதலைப் பற்றி எனக்கு கவலையில்லை; அந்தப்படம் நிச்சயமாக பெரிய சாதனைகளை படைக்கும் என்று நம்புகிறேன். மலையாள சினிமா நல்ல கதையம்சம் கொண்ட கதைகளை படங்களாக உருவாக்குவதில் பெயர் பெற்றது.
இப்போது வந்திருக்கும் எம்புரான் படம் பெரிய பான்-இந்தியா படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இது ஒரு பெரிய படமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒவ்வொரு மலையாளியும் இது ஒரு பெரிய படமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
நான் மோகன்லாலின் தீவிர ரசிகன், பிருத்வியும் எனக்கு நல்ல நண்பர்.தனுஷைப் போலவே பிருத்விராஜ் ஒரு நடிகராக இருந்தபோதிலும், எவ்வளவு சிறந்த இயக்குநராக இருக்கிறார் என்பதைப் பார்த்து ஆச்சரியமாக இருக்கிறது.
எம்புரான் மலையாள சினிமாவுக்கான சாதனைகளை உருவாக்கும் முதல் பான்-இந்திய படமாக இருக்கும் என்று நம்புகிறேன். அன்றைய தினம் வெளியாகும் இரண்டு படங்களையும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். எங்களுடையதும் ஒரு நல்ல படம், இரண்டு படங்களும் ஒரே நாளில் வருவதால், எப்போதும் கதையம்சம் சார்ந்த படங்களை விரும்பும் மலையாளிகள், வீர தீர சூரன் படத்தையும் விரும்புவார்கள் என்று நம்புகிறேன்’ என்று பேசினார்.