ராஜமவுலி படத்தின் காட்சிகள் லீக் ஆனது. பட குழுவினர் அதிர்ச்சி!

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்துவிட்டது. தற்போது 2-ம் கட்ட படப்பிடிப்பு ஒடிசா மாநிலத்தில் தொடங்கி இருக்கிறது. இதில் கலந்துக் கொள்வதற்காக மகேஷ் பாபு மற்றும் பிரித்விராஜ் உள்ளிட்ட குழுவினர் சென்றிருந்தனர்.

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பை தொடர்ந்து, ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள காடுகளில் சில முக்கிய காட்சிகளை படமாக்கவுள்ளது படக்குழு. இதற்காக இப்போதே பல்வேறு முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் இருந்து தயாராகும் படங்களில் அதிக பொருட்செலவில் தயாராகும் படம் இது.

ஆனால் தற்போது ஒடிசாவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து, காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இதனால் ராஜமவுலி குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஏனென்றால், இதற்கு முன்னர் படங்களில் இருந்து எந்தவொரு காட்சியும் வெளியாகாமல் இருந்தது. தற்போது ராஜமவுலி படப்பிடிப்பு தளத்திலிருந்து முதன்முறையாக வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.