நாசர், ஆரவ், யோகி பாபு, ஓவியா இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில், இயக்குனர் நரேஷ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.
தனக்கு பிடித்த தாய் இறந்து போன சோகத்தில், யாரிடமும் பெரிதாக பேசாத ஆரவ், தனக்கு பிடித்த யானையை கண்டதும் பழகத் தொடங்குகிறார். இன்னொரு பக்கம் ஒரு கும்பல் காட்டு மிருகங்களை வேட்டையாடி அதன் மதிப்புள்ள உறுப்புகளை வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்கிறது.
இன்னொரு பக்கம் ஆன்மீகம் ஜோசியத்தை நம்பியே வாழும் அறநிலையத்துறை அமைச்சரான KS ரவிக்குமாருக்கு திடீரென ஒரு சிக்கல் ஏற்படுகிறது. இதற்காக ஜோசியர் சொல்லும் ஒரு வார்த்தையை நம்பி அவர் பயணப்படுகிறார்.
இப்படி மூன்று கதைகளும் மூன்று கோணத்தில் இருந்தாலும், ஆரவின் யானையான பீமா எப்படி சிக்கிக் கொள்கிறது என்பது தான் படத்தின் கதை கரு.
ஆரவ் அழகாகவே இருக்கிறார், நடிப்பில் மட்டும் கொஞ்சம் தேறியிருக்கலாம். ஓவியா ஒரு பாடலுக்கு வருகிறார். ஓவியா ஆர்மி இழுத்து மூடி பல வருடங்கள் ஆகிவிட்டது என்பது அனைவருக்கும் தெரியும். யாஷிகா ஆனந்த் கவர்ச்சிகரமாக வருகிறார். ஆனால் கதைக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லை. யோகி பாபு பண்ணும் காமெடி, ஒரு கடுப்பு நெடி.
இது மாதிரியான கதை, ஜப்பானிய மொழிகளில் பல படங்கள் வந்து விட்டன. அதிலும் குறிப்பாக டோனி ஜா நடித்து தமிழில் டப் செய்யப்பட்ட கும்கி வீரன் படத்தை அனைவரும் பார்த்திருப்போம். சரி அது போதாது என்று விட்டுவிட்டால், டைகர் ஷெராப் நடித்த ஜங்கிள் படத்தை அனைவரும் பார்த்திருப்போம். அதன் பிறகு இந்த கதையை எடுக்கிறார்கள் என்றால், திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டாமா?
படத்தில் இசை மற்றும் பாடல்கள் நன்றாக இருந்திருந்தாலும் அதற்காகவாவது மக்கள் கூடி இருப்பார்கள். அதுவும் கொஞ்சம் சொதப்பல்.
ஒரே ஒரு ஆறுதல் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியை ஒளிப்பதிவாளர் ஓரளவுக்கு நேர்த்தியாக காட்டியிருக்கிறார்.
அனைவருக்கும் தெரிந்த கதை, யூகிக்கக்கூடிய திரைக்கதை இன்று எந்தவிதத்திலும் சரியாகப் பொருந்தாததால் ராஜ பீமா படம் ஒரு பெரிய ஏமாற்றம்.