குரு சோமசுந்தரம், சான்ச்சனா நடராஜன், ஜான் விஜய், பாரி இளவழகன் நடிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தி,ல் நீளம் ப்ரொடக்ஷன் சார்பாக பா.ரஞ்சித் தயாரித்து வெளியிட்டு இருக்கும் படம்.
டைல்ஸ் ஒட்டும் தொழிலில் கெட்டிக்காரனாக இருக்கும் ராதாமணி, எப்பொழுது பார்த்தாலும் குடியும் குடித்தனமாகவே இருக்கிறார். அதனாலேயே அவருக்கு பாட்டில் ராதா என்று பெயர் வைத்து விடுகிறார்கள். அவரது மனைவியாக வரும் சான்ச்சனாவும் அவரது குழந்தைகளும் எப்படியாவது பாட்டில் ராதாவை குடியிலிருந்து மாற்றி விடலாம் என்று போராடுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு தடவையும் போராட்டம் வெற்றி அடையாமல் இருக்கிறது. இறுதியாக ஜான் விஜய் நடத்தும் மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். ஆனால் அங்கு இருக்க பிடிக்காமல் தப்பித்து விடுகிறார். மீண்டும் குடியோடு வாழ்வதால், சான்ச்சனா அவரை விட்டு விலகிப் செல்கிறார். பாட்டில் ராதாவும் குடியை விட வேண்டும் என்று முயற்சி செய்தாலும் முடியாமல் தோற்று விடுகிறார். இறுதியில் ஜான்விஜய்யின் மறுவாழ்வு மையத்திற்கு அவராகவே வந்து சேர்கிறார். அவர் என்னதான் திருந்தி விட்டேன் என்று கூறினாலும் அவரது மனைவி சான்ச்சனா ஏற்றுக் கொள்ளாததால், பொறுமையோடு காத்திருக்கிறார். இறுதியில் பாட்டில் ராதா குடியை நிப்பாட்டினரா, தன் குடும்பத்தோடு ஒன்று சேர்ந்தாரா என்பது தான் படத்தின் கதை.
வழக்கமாக குரு சோமசுந்தரத்தின் நடிப்பு அற்புதமாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் ஜான் விஜய்யின் நடிப்பு அவரின் நடிப்பை விட ஒரு படி மேலே போய் நிற்கிறது. சான்ச்சனா நடராஜனின் நடிப்பும் வேறு லெவல். பாரி இளவழகன் நிஜமான மொடா குடிகாரனாக வந்து மிரட்டுகிறார்.
படம் சென்னையைச் சுற்றி நடைபெறுவதால், வட்டார வழக்கு மிகவும் எதார்த்தமாகவும் நமக்கு பொருந்தும் படியாக அழகியலோடு இருக்கிறது.
ஷான் ரோல்டனின் இசையும், படத்தின் ஒளிப்பதிவும் கூடுதல் பலம்.
முதல் அரை மணி நேரம் படம் கருத்து சொல்ல வருவது போல் நமக்கு தோன்றும், அதை மட்டும் சகித்துக் கொண்டால் போதும், அனைவருக்கும் இது பார்க்க வேண்டிய ஒரு படமாக தோன்றும்.
நம்மில் பலரும் குடியை விட வேண்டும் என்று ஆசைப்படுவோம், ஆனாலும் விட முடியாமல் தவிப்போம். அவர்களுக்கான ஒரு கதை தான் இந்த பாட்டில் ராதா.
இயக்குனர் தினகரன் சிவலிங்கத்திற்கு வாழ்த்துக்கள். ஏனெனில் இதற்கு முன்னால் கூட குடிமகன், இறைவி போன்ற படங்களில் குடிகாரன் திருந்துகிறானா இல்லையா என்ற கோணத்தில் படம் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்தப் படம் அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதத்தில் அமைந்திருக்கிறது.
ஆக மொத்தத்தில் பாட்டில் ராதா, குடியை நிறுத்த வேண்டும் என்று சொல்லி குடியை நிறுத்தாமல் தடுமாறுபவர்களுக்கு ஒரு குவாட்டர் வாங்கி கொடுத்து படம் பார்க்க வைத்தால் கொஞ்சமாவது மனம் மாறுவார்கள் என்று நம்பலாம்.