அருண் விஜய், ரோஷினி, சமுத்திரக்கனி, மிஷ்கின் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.
காது மற்றும் வாய் பேச முடியாத அருண் விஜய், ஒரு தங்கச்சியுடன் பாசமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார். முன்கோபக்காரரான இவர் அநியாயம் நடந்தால் அடிதடியுடன் தான் தட்டிக் கேட்பார். இதனால் அவரைச் சுற்றி இருந்த உறவுகள் அனைவரும் அவருக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்தால் அனைத்தும் சரியாகிவிடும் என்ற முனைப்பில், ஆதரவற்றோர் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் செக்யூரிட்டி வேலைக்கு சேர்த்து விடப்படுகிறார். அங்கு எதிர்பாராத விதமாக நடக்கும் சம்பவத்தால், ஜெயிலுக்கு செல்ல நேரடிகிறது. இறுதியில் அவருக்கு என்ன நேர்ப்படுகிறது என்பது தான் படத்தின் கதைக்கரு.
படத்தின் முதல் 20 நிமிடங்கள் இது பாலா படம் தானா என்ற சந்தேகத்தை அதிகமாகவே ஏற்படுத்தும். ஏனெனில் அவ்வளவு கமர்சியல் அந்த படத்தில் உள்ளன. அதன் பிறகு சிறிது நேரம் கழித்து பார்க்கும் பொழுது பிதாமகன் இரண்டாம் பாகத்தை எடுத்து விட்டாரோ பாலா என்ற நினைக்கத் தோன்றும். ஆனால் இடைவெளியில் பாலா பாலா தான் என்று நம்மை அசத்தி விடுகிறார்.
இரண்டாம் பாதி படம் ஜெட் வேகத்தில் நகர்கிறது. படம் சட்டு என்று முடிந்து விடுகிறது கனத்த வலியுடன்.
ஒவ்வொரு கதாபாத்திரங்களின் மிகைப்படுத்தப்பட்ட உணர்வு பாலாவின் படைப்பு என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான், இந்தப் படத்திலும் அதே முறை தான்.
எப்பொழுதுமே எதார்த்தத்தை பார்க்கும் பாலா, இந்த படத்தில் லாஜிக்கை நிறையவே மீறி இருக்கிறார். இருந்தாலும் கதையின் கரு சற்று அழுத்தமாக இருப்பதால் அதை மன்னித்து விட தோன்றுகிறது.
அருண் விஜய் நல்ல நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பாலா படத்தில் வித்தியாசமான நடிகர் என்று எங்கும் தெரியவில்லை. அவர் தங்கையாக வருபவரும் மிகவும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கதாநாயகி ரோஷினி, பிதாமகன் படத்தில் வரும் லைலாவை ஞாபகப்படுத்துகிறார். மிஷ்கின் சூப்பராக நடித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு இன்னொரு கூடுதல் பலம் பின்னணி இசை, சாம் சி எஸ் முத்திரை பதித்திருக்கிறார். பாடல்களின் மூலம் ஜிவி பிரகாஷ் அடுத்த இளையராஜாவாகவே ஜொலிக்கிறார்.
கன்னியாகுமரி போன்று சுற்றுலா தளத்தில் படம் எடுப்பது மிகவும் கடினம். அதிலும் இந்தப் படத்தை எடுப்பது மிக மிக கடினம். பாலாவின் கற்பனைக்கு உயிரூட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர். மிகவும் சிரமப்பட்டு இருப்பது படத்தில் அப்படியே அப்பட்டமாக தெரிகிறது.
ஆக மொத்தத்தில் வணங்கான் படம் ஏற்கனவே பார்த்து கேட்டு பழகிய தெரிந்த கதைதான் என்றாலும் பாலா என்ற மிகப்பெரிய இயக்குனரின் ஆளுமையால் அந்தக் கதை மிகப்பெரிய உயிரோட்டத்தை பெற்று இருக்கிறது என்பதுதான் உண்மை. இதன்மூலம் கம் பேக் கொடுத்துள்ளார் பாலா என்றே சொல்லலாம்.