சோனி நிறுவனம், கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் மூவரும் இணைந்து தயாரித்த படம் ‘அமரன்’. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்திருந்தார்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அனைத்து மொழிகளிலும் கொண்டாடப்பட்டது. தற்போது ஓடிடி தளத்தில் ‘அமரன்’ பார்த்துவிட்டு மீண்டும் பலர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர், ‘அமரன்’ பார்த்துவிட்டு தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் ‘நான் இதைத் தாமதமாகத்தான் பார்க்கிறேன். ஆனால், என்ன ஓர் ஆச்சரியகரமான, உருக்கமான திரைப்படம். இந்த வருடத்தை முடிக்க என்ன ஒரு சிறப்பான வழி. இந்த வருடத்தின் மிகச் சிறந்த மனதைத் தொட்ட, மனதை கனக்கச் செய்யும் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார் ஜான்வி கபூர்.