பராரி திரை விமர்சனம்

புதுமுக நடிகர்களான சுகுமார், சங்கீதா கல்யாண் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில், அறிமுக இயக்குனர் எழில் பெரிய வேடி இயக்கத்தில், இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தி,ல் இரு வேறு சாதிப்பிரிவுகளாக பிரிந்து, எப்பொழுது பார்த்தாலும் சண்டை போட்டு கிடக்கும் இரண்டு மக்களுக்கு இடையே உள்ள உணர்வுகளைப் பற்றி பேசும் கதை. தமிழ்நாடா..? கர்நாடகாவா..? என்று மொழிவாரியான பிரச்சினைகளைப் பற்றி பேசும் கதையும் கூட!

ராஜமுருகன் இயக்கிய படங்கள் எல்லாமே சமூக கருத்தை முன்னிறுத்தி பேசப்பட்டவை. இந்தப் படத்தின் கதைக்களமும் அப்படி ஒரு சாதியம் மற்றும் மொழி பாகுபாடு பற்றிய சமூக கருத்தை வலியுறுத்தி தான் எடுக்கப்பட்டிருக்கிறது.

படத்தில் நடித்த அனைத்து கதை மாந்தர்களும், இந்த படத்தில் மிகவும் எதார்த்தமான நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு அம்சம். அதிலும் கதாநாயகனும் கதாநாயகியும் இறுதி கட்ட காட்சியில் நடித்திருப்பது ‘பருத்திவீரன்’ படத்தை நமக்கு ஞாபகப்படுத்தும்.

இந்தப் படத்தின் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால், திரைக்கதை நடக்கும் இடம் திருவண்ணாமலை மாவட்டம். பொதுவாகவே தெ,ன் மாவட்டங்கள், கொங்குநாடு சென்னை ஆகியவற்றைச் சுற்றிய கதைகளம் கொண்ட கதைகளே பெரிதாக வந்திருக்கும் பட்சத்தில், விழுப்புரம் மாவட்டங்களை சுற்றியுள்ள, ஏனைய பகுதிகளை சார்ந்த கதைகள் மிகவும் அரிதாகவே வந்திருக்கின்றன. ஆனால் இந்தப் படம் அங்கு வாழும் மக்களின் வர்க்க பிரச்சனைகளைப் பற்றி மட்டும் பேசாமல், பிழைப்புக்காக வேறு மாநிலங்களுக்குச் சென்று கடனை அடைக்கப் போராடும் வாழ்வியலைப் பற்றியும் பேசி இருக்கிறது. இதை மிகவும் நேர்த்தியான திரை கதையோடு கொடுத்திருப்பது தான் இதன் சிறப்பு.

இந்தப் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருப்பது இசை அமைப்பாளர் சான் ரோல்டனின் இசை! ஆனால் பாடல்கள் இளையராஜாவின் மெட்டுகளை ஞாபகப்படுத்தாமல் இல்லை!

மேலும் கதைக்குத் தேவையான எதார்த்த வசனங்கள் மட்டுமில்லாமல், சில இடங்களில் தேவையான கம்யூனிச வசனங்களையும் புகுத்தி இருப்பது இயக்குனரின் எழுத்துக்கு அழகு சேர்க்கிறது.

இந்த படத்தின் இயக்குனர் எழில் பெரிய வேடிக்கு வாழ்த்துக்கள். இயக்குனர் ராஜமுருகனின் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்தவர் என்பதை நிரூபித்திருக்கிறார்!

படத்தின் குறையாக பார்க்கப்படுவது, சாதியம் சார்ந்த விஷயங்கள் ஆரம்பத்தில் நிறைய காட்சிகளாக விரிவடையும், ‘அது நமக்கு மேலும் ஒரு சாதி படமா..?’ என்ற சலிப்பை தட்டும். இரண்டாம் பாதியில் நகரும் திரைக்கதை கொஞ்சம் தொய்வாகத்தான் போகும், அதை இன்னும் சிறப்பாக எடிட் செய்திருக்கலாம்.

ஆக மொத்தத்தில் பராரி படம் வாழ்வியல் பற்றி பேசும் சாதியப்படம்.

இந்த மாதிரியான படங்கள் திரையரங்குகளில் கொண்டாடப்பட வேண்டும். இல்லை என்றால் நல்ல படங்களுக்கு மதிப்பில்லை என்று அனைத்து நல்ல இயக்குனர்களும் ஓரம் கட்டப்படுவார்கள்.