வேட்டையன் திரைவிமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், ரானா டகுபதி, கிஷோர் குமார் இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்து வெளியாகி இருக்கும் படம்.

அதியன் என்கிற வேட்டையன் என்கவுன்ட்டர் ஸ்பெசலிஸ்ட். ஒரு முக்கியமான பிரச்சினையில், பள்ளிக்கூட ஆசிரியராக வரும் துஷாரா விஜயனக்கு உதவி செய்கிறார். அதன்பின் துஷாரா விஜயன் சென்னைக்கு மாற்றுதல் வாங்கி செல்கிறார். ஆனால் அங்கு துஷாரா விஜயன் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுகிறார். இதனால் சிறைபிடிக்கப்பட்ட அந்தக் கைதி தப்பித்துச் செல்ல, அந்தப் பிரச்சனை தேசிய பிரச்சினையாக மாறுகிறது. இதனால் அரசு அவனை என்கவுன்ட்டரில் போட்டு தள்ளுவதற்காக, சிறப்பு அதிகாரியாக ‘வேட்டையன்’ ரஜினிகாந்தை நியமிக்கிறது. ரஜினியும் அந்த என்கவுன்ட்டரை சிறப்பாக முடிக்கிறார். ஆனால் அதன் பின் தான் தெரிகிறது, அது ஒரு தப்பான ஆளுக்காக செய்யப்பட்ட என்கவுன்ட்டர் என்று, இதனால் மனம் நொந்து போன ரஜினிகாந்த் துஷாரா விஜயனின் மரணத்திற்கு காரணம் யார் என்றும், தவறாக என்கவுன்ட்டர் செய்யப்பட்ட அந்த நபருக்காக பிராயச்சித்தம் செய்யும் விதத்திலும் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கும் நோக்கத்துடனும் களம் இறங்குகிறார், அதன்பின் என்ன நடந்தது என்பது தான் கதை.

இவருக்கு உதவியாக, பகத் பாசில் பேட்டரி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். துஷாரா விஜயன் எளிமையான டீச்சராக வந்து அனைவரின் மனதையும் கொள்ளை கொள்கிறார். ரித்திகா சிங்கின் அந்த ஒரு சண்டை காட்சிக்காக திரும்பத் திரும்ப பார்க்கலாம். அமிதாப்பச்சன் ரஜினிகாந்த், இவர்களுக்கு இடையே நடக்கும் போட்டி மிக அருமையாக உள்ளது.

மஞ்சு வாரியருக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் அந்த ஒரு காட்சிக்காக அவரை மெய்சிலிர்த்துப் பார்க்கலாம். ராணா டகுபதி வில்லனுக்கு ஏற்றவர் என்பதாலும், அவரின் உடல்வாகு அந்தக் கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு இருப்பதாலும், மிக அருமையாகவும் நேர்த்தியாகவும் நடித்திருக்கிறார்.

கதைக்கரு சிறியதாக இருந்தாலும் இந்தக் கதையின் பின்னணியில் நடக்கும் சில பல காட்சிகள் சமூகத்தில் ஏற்பட்ட அவலங்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன.

இந்தப் படத்திற்கு எஸ் ஆர் கதிர் தனது ஒளிப்பதிவின் மூலம் மிகப்பெரிய உயிரோட்டம் கொடுத்திருக்கிறார்.

அனிருத்தின் பின்னணி இசை இரைச்சியாக இல்லாமல் உண்மையிலேயே இசையாக இருப்பது இந்த படத்தில் தான். இது மாதிரியே இசை அமைத்தால் இளையராஜா, ஏ ஆர் ரகுமான் வரிசையில் இவரும் வரலாம்.

படத்தில் ஆங்காங்கே சில லாஜிக் மிஸ்டேக்ஸ் உள்ளன. ஆனாலும் படம் முதல் பாதியில் சென்ற வேகத்தில் இரண்டாம் பகுதியில் செல்லாமல் போனதால் ரசிகர்களுக்கு சில காட்சிகள் சலிப்பை கொடுக்கிறது.

படத்தில் இன்னொரு குறையாக பார்க்கப்படுவது படத்தின் முதல் பாதியில் முதல் அரை மணி நேரம், கதைக்குள் செல்லாமல் ரஜினியிஷம் காட்ட வேண்டும் என்பதற்காக எடுத்து இருக்கிறார்கள். ஒருவேளை இந்த படத்தில் ரஜினி நடிக்கவில்லை என்றால் இந்த காட்சி அனைத்தையும் நிச்சயமாக எடுத்திருக்க மாட்டார் இயக்குனர் தா சே ஞானவேல்.

ஜெய் பீம் படம் அளவுக்கு ஒரு ஆழமான அழுத்தமான கதை கருவை கொண்டு உள்ளதா..? இந்த படம் என்றால், அதை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். காரணம் இது ஒரு ஃபேன் இந்தியா வகைையிலான படம். அதனால் தமிழ்நாட்டில் நடக்கும் ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை மையமாக வைத்து மட்டும் இந்திய முழுவதும் இணைப்பதற்கு உண்டான கதை சாத்தியமல்ல என்பதனால், அனைத்து விதமான மக்களுக்கும் பொருந்தும் வகையில் பொருத்தமான சமூகப் பிரச்சனைகளை எடுத்து அலசி பேசியிருக்கிறார் இயக்குனர் தா செ ஞானவேல். ஆனால் ரஜினியிசம் என்று ஒரு வார்த்தைக்கு அகராதியில் இடமில்லாமல் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இதனால் இது நிச்சயம் கலவையான விமர்சனங்களை பெறும் என்பதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை.

ஆக மொத்தத்தில் வேட்டையன் படம், ரஜினி நடிப்பில் வெளிவந்திருக்கும் ஆகச்சிறந்த ஒரு படம். ஆனால் இது ரஜினிகாந்த் படம் அல்ல.