என்னை ஃப்ரீயாக விட்டு இருந்தால் நன்றாக இசையமைத்திருப்பேன் – புலம்பும் யுவன் சங்கர் ராஜா.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. இளையராஜாவின் இளைய மகனான இவரது இசைக்கென்று பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். யுவனின் இசையுடைய பலமே மிகவும் எளிமையாக அனைவரிடமும் கனெக்ட் ஆவதுதான் என அவரது ரசிகர்கள் எப்போதும் கூறுவதுண்டு.

அரவிந்தன்: யுவன் ஷங்கர் ராஜா திரையுலகில் அரவிந்தன் படம் மூலம் அறிமுகமானார். இதில் சரத்குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் 1997ஆம் ஆண்டு வெளியானது. அரவிந்தன் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும்போது அவருக்கு வயது 15லிருந்து 17க்குள்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்தில் அவரது இசை பெரிதாக ஒன்றும் கவனிக்கப்படவில்லை.

கவனம் ஈர்த்த யுவன் ஷங்கர் ராஜா: முதல் படத்தில் அப்படி இப்படி கவனிக்கப்படாமல் போன யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்த படம் பூவெல்லாம் கேட்டுப்பார். இயக்குநர் வசந்த்தின் படங்களில் எப்போதும் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். அதற்கு தகுந்ததுபோல் இசையமைத்தார் யுவன் ஷங்கர் ராஜா. இன்றுவரை பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் பாடல்கள் அனைத்தும் எவர் க்ரீனாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

உச்சம் தொட்ட யுவன்: பூவெல்லாம் கேட்டுப்பார் படத்துக்கு பிறகு யுவனின் மெட்டுக்கள் எல்லாமும் ஹிட்டாகின. இளையராஜா, ரஹ்மான், வித்யாசாகர், தேவா, கார்த்திக் ராஜா என பலரும் தங்களது பெஸ்ட்டை கொடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் உள்ளே வந்து தனது எளிமையான இசை மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டார் யுவன். குறிப்பாக செல்வராகவனுடன் இணைந்து 2000களின் தொடக்கத்தில் யுவன் கொடுத்தது எல்லாமே ஹிட். அதேபோல் ராம், விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு, அமீர் என பல இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்து யுவன் ஷங்கர் ராஜா உச்சம் தொட்டார்.

GOAT: யுவன் ஷங்கர் ராஜா இப்போது GOAT படத்துக்கு இசையமைத்திருக்கிறார். விஜய்யுடன் பல வருடங்களுக்கு பிறகு இணைந்து பணியாற்றுகிறார் யுவன். இதனால் பாடல்கள் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்போடுதான் படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியாகின. ஆனால் அத்தனையும் ரசிகர்களிடம் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் யுவன் ஷங்கர் ராஜா குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.

அந்தணன் பேட்டி: தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “GOAT பட பாடல்கள் ரசிகர்களிடம் ஏமாற்றத்தைத்தான் கொடுத்திருக்கிறது. இன்றுகூட யுவனின் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் என்னிடம் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதாவது, கோட் பட பாடல்களுக்கு கிடைத்திருக்கும் ரெஸ்பான்ஸால் யுவன் ஷங்கர் ராஜா உச்சக்கட்ட அப்செட்டில் இருக்கிறாராம். மேலும் அவரிடம் யுவன், ‘ஒரு சிச்சுவேஷன் சொல்லி இசையை கேட்கிறார்கள். நான் சில ட்யூன்களை அனுப்புகிறேன். அதனை செலெக்ட் செய்யும் இடத்தில் விஜய்தான் இருக்கிறார்.

அவர் செலெக்ட் செய்த ட்யூன்கள்தான் இவை. இந்தப் படத்துக்கு முன்னதாக ஸ்டார் படம் செய்தேன். அதில் பாடல்கள் எல்லாம் நன்றாகத்தானே வந்தன. என்னை ஃப்ரீயாக விட்டால் நான் சிறப்பாகவே இசையமைத்து கொடுப்பேன்’ என கூறியதாக அவர் என்னிடம் சொன்னார்” என்றார் அந்தணன்.