முற்றிலுமாக யூடியூப் பிரபலங்கள் நடித்து, இயக்குனர் வெங்கட் பிரபுவின் தயாரிப்பில் வெளியான படம்.
இது வழக்கமாக ஜெயிக்கும் டெம்ப்ளேட்டை கொண்ட ஒரு படம் மட்டுமே.
ஒரு காலனியில் பாலிய வயது நண்பர்கள் ஒரே பள்ளிக்குச் செல்கிறார்கள், அதன் பிறகு வெவ்வேறு கல்லூரிக்கு செல்கிறார்கள், அதன் பிறகு வேலைக்குச் செல்கிறார்கள். ஆனால் அதில் ஒருவன் மட்டும், தன்னுடைய வித்தியாசமான சிந்தனையால் புறந்தள்ளப்படுகிறாள், பிறகு மீண்டும் எப்படி வெகுண்டெழுந்து, தன்னுடைய நண்பர்களால் அரவணைக்கப்படுகிறான் என்பது தான் படத்தின் கதைகரு.
மலையாளத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட ஹிருதயம் பட ஸ்டைலில் படம் இருக்க வேண்டும், ஆனால் அதே சமயம் இந்த படம் ஹிருதயம் என்று பேசி விடக்கூடாது என்று முனைப்பில் படத்தை எடுத்திருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்.
யூடியூபில் பல பிரபலமானவர்கள் இதில் நடிப்பதால், படம் பிரமோஷனுக்கு பஞ்சம் இருக்காது என்ற நம்பிக்கையில் இந்த படத்தை எடுத்திருப்பார் இயக்குனர் என்றே தோன்றுகிறது.
ஏனென்றால் இந்த கதை அதர பழைய கதை மட்டுமல்ல, இன்றைய காலகட்டத்தில் உள்ள கல்லூரி நண்பர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பொருந்தாத கதையாகவே பார்க்கப்படுகிறது. இந்தக் கதை எல்லாம் 2010 ஆம் ஆண்டிலேயே வழக்கொழிந்து விட்டது என்பதுதான் உண்மை.
இந்தப் படத்தின் இசையமைப்பாளர், நியாயமாக பார்த்தால் ஏ ஆர் ரகுமானுக்கு மிகப்பெரிய ராயல்டி தொகையை தர வேண்டியது இருக்கும். காரணம் என்னவென்றால் படத்தில் அவருடைய இசையைத் தவிர, ஏ ஆர் ரகுமானின் இசையும் பாடல்கள் மட்டுமே அங்கங்கே தெரிகிறது.
என்னதான் இந்தப் படத்தில் ஒளிப்பதிவு மிக அருமையாக இருந்தாலும், படம் மனதில் நிற்கவில்லை.
படத்தில் மிகப்பெரிய ஆறுதல் மதுரை அழகர் கேரக்டரில் வரும் அந்த நடிகர் மற்றும் நடிகர் குமரவேலின் கதாபாத்திர வடிவமைப்பு மட்டுமே.
இந்தப் படம் மிக நீண்ட வருடங்களுக்கு பிறகு வெளியான ஒரு காரணத்தினால் கூட இந்த படத்தின் கதை அம்சம் பலருக்கு பிடிக்காமல் போயிருந்திருக்கலாம். ஒருவேளை அன்றைய காலகட்டத்தில் இது ரிலீஸ் ஆகி இருந்திருந்தால் கொஞ்சம் பரவலாக பேசப்பட்டிருக்கும்.
ஆக மொத்தத்தில் நண்பன் ஒருவன் வந்த பிறகு, மிக மோசமான கதை அல்ல. நண்பர்களுடன் ஒரு தடவை பார்க்கக் கூடிய படம்.