7G திரைவிமர்சனம்

7G ரெயின்போ காலனி படத்தின் தொடர்ச்சி என்று யாரேனும் நினைத்தால் அதற்கான படம் இது இல்லை.

ஸ்மிருதி வெங்கட்க்கு அழகான கணவர், அன்பான குழந்தை என்று சந்தோஷமாக  புது வீடு ஒன்றில் குடி பெயர்கிறார். ஆனால் அதே சமயம், ஸ்மிருதியின் கணவரை அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண் ஒரு தலை பட்சமாக காதலிக்கிறார். தன் காதலனை அடைவதற்காக பிளாக் மேஜிக் என்கிற ஜித்து வேலைகள் அனைத்தையும் செய்கிறார். இது வீட்டில் தனியாக இருக்கும் ஸ்மிரிதி வெங்கட் மற்றும் அவரது பையன் வீட்டில் வேலையை காட்டுகிறது. ஒரு கட்டத்தில் தான் தெரிகிறது இதற்கு யாரெல்லாம் காரணம் என்று..?

தமிழ் சினிமாவில் வழக்கமாக அடித்து துவைத்த ஒரு கதை. இயக்குனர் ஹாரன் இந்த கதையை எந்த நம்பிக்கையில் எடுத்தார் என்று தெரியவில்லை. 90 கால கட்டங்களில் பேய் படம் என்றால் நமக்கு ஒரு பயம் இருக்கும். 2k காலகட்டங்களில் பேய் படம் என்றால் நமக்கு நகைச்சுவை கலந்த பயம் இருக்கும். ஆனால் இந்த படம் எந்த வகையிலும் சேரவில்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை.

படத்தில் சோனியா அகர்வால் பேயாக வருகிறார், அதற்காக ஏன் கண்ணை உருட்டி உருட்டி பார்க்கிறார் என்று தான் புரியவில்லை.

சித்தார்த் விபின் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அது பெரிதாக எடுபடவில்லை.

ஸ்மிருதி வெங்கட் மட்டுமே இந்த படத்தில் நடிப்பில் மெருகேறி இருக்கிறார்.

படத்தில் இரண்டு விஷயங்கள் நல்ல விஷயமாகப் பட்டன. ஒன்று ஒளிப்பதிவு. நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்பதை தத்ரூபமாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இரண்டாவது படத்தின் காஸ்டியூம் டிசைனர். கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு காஸ்ட்யூம் வடிவமைத்திருக்கிறார்.

இந்த படத்திற்கு சித்தார்த்விபின் மியூசிக் போட்டு இருக்கார். ஆனால் ஏனோதானோ என்று போட்டு இருக்கிறார்.

ஆக மொத்தம் 7ஜி பெரிய எதிர்பார்ப்பும் இல்லாத, எந்த எதிர்பார்ப்பையும் நிறைவேற்றாத ஒரு சாதாரண படம்.