லாஸ் ஏஞ்சல்ஸில் மகாராஜா

தமிழ் சினிமாவில் எதார்த்த நடிப்புக்கு பெயர்போன நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.

பலவேறு படங்களில் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்டாக வலம் வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின் நல்ல நல்ல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி வரவேற்பைப் பெற்றார். இதனால் மிக விரைவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக மாறினார்.

கதாநாயகனாக மட்டும் இல்லாமல், பல படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். செக்கச் சிவந்த வானம் போன்ற படங்கள் எல்லாம் இவர் கதையின் நாயகனாக நடித்து வெளியான படங்கள் எனக் கூறலாம். இவரது நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள படம் மகாராஜா.

இந்தப் படம் விஜய் சேதுபதியின் 50வது படம் என்பதால் மகாராஜா படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் நடிகர்களின் 25வது, 50வது படங்கள் பெரும்பாலும் சொதப்பலாகியுள்ளது. குரங்கு பொம்பை படத்தினை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இந்தப் படத்தை இயக்கினார். தனது 50வது படத்தில் மாஸான ஆக்‌ஷன் படமாக நடிக்காமல் எளிமையான கதையைத் தேர்ந்தெடுத்து அதில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி படத்தை மாபெரும் வெற்றிப் படமாக மாற்றியுள்ளார்.

மிரட்டி விட்ட நடிகர்கள்: படத்தின் கதை, திரைக்கதை, படத்தொகுப்பு, படத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதி, நட்ராஜ், சிங்கம் புலி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலரும் சிறப்பாக நடித்து கதைக்கு உயிரூட்டி உள்ளனர். இதுமட்டும் இல்லாமல், படத்தின் வில்லன் கதாபாத்திரம் என்பதைக் காட்டிலும் எதிர்மறைக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அனுராக் காய்ஷப் க்ளைமேக்ஸ் காட்சிகளில் மிரட்டிவிட்டிருப்பார். பாரதிராஜாவும் தான் இடம் பெற்ற காட்சிகளில் மனதில் நிற்கும்படியான வசனங்கள் மூலம் மிளிரினார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் மகாராஜா: இதுமட்டும் இல்லாமல் படம் விமர்சன ரீதியாக வெற்றியைப் பெற்றது மட்டும் இல்லாமல், வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆஃபீசில் கலக்கிக் கொண்டு உள்ளது. இந்நிலையில் படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் மகாராஜா படம் திரையிடப்படவுள்ளது.

ரசிகர்கள் கேள்விக்கு பதில்: இது குறித்த அறிவிப்பை லாஸ் ஏஞ்சல்ஸில் சர்வதேச இந்திய திரைப்பட விழாவினை நடத்தும் அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் அதாவது ஜூன் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை நடைபெறவுள்ள திரைப்பட விழாவில் மகாராஜா திரைப்படம் நிறைவு நாளான 30ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படும் என தெரிவித்துள்ளது. இதனால், படக்குழு வரும் 30ஆம் தேதி மாலை 6.30 மணிக்கே லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் திரைப்படவிழாவில் கலந்து கொண்டு ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்கவுள்ளனர் என கூறப்படுகின்றது.