பிரபுதேவா படத்தில் சன்னி லியோன் நடனம்

நடிகர் பிரபு தேவா நடிக்கும் புதிய படமான பேட்ட ராப்பில் நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், நடன இயக்குநராகவும் வலம் வருபவர் பிரபு தேவா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பஹீரா.

இதனையடுத்து விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதையடுத்து சக்தி சிதம்பரம் இயக்கும் புதிய திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். பிரபல மலையாள நடிகை மடோனா செபாஸ்டியன் நடிக்கும் இப்படத்திற்கு ஜாலியா ஜிம்கானா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதியதிரைப்படம் தான் ‘பேட்ட ராப்’. படத்தில் நாயகியாக வேதிகா நடித்துள்ளார்.

மேலும், பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது.

இத்திரைப்படத்திற்கு டி இமான் இசை அமைக்கிறார். விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனமான டிசீரிஸ் கைப்பற்றி இருக்கிறது. மேலும், படத்தில் சுமார் 10 பாடல்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.