இளையராஜா பிறந்தநாள் : தனுஷ் வெளியிட்ட பதிவு

இசை ஞானி என்று தமிழ் சினிமா ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இளையராஜாவுக்கு இன்று 81ஆவது பிறந்தநாள். இதனையொட்டி அவருக்கு திரைத்துறையினர், ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

50 ஆண்டுகளுக்கு மேலாக திரை துறையில் இருந்து வரும் இளையராஜா, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். படத்தின் கதை, நடிகர்கள் என பலவற்றையும் கடந்து இவருடைய பாடல்களுக்காகவே ஓடிய படங்களும் உள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட பல திரையுலகி ஹீரோக்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை இளையராஜா வழங்கியுள்ளார். அவரது பாடல்கள் காலத்தால் அழியாதவை என்றும், எந்த ஒரு சூழலுக்கும் அவரது பாடல்கள் பொருந்தும் என்றும் அவரது ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

இருப்பினும் கடந்த ஜனவரி மாதம் தனது மகள் பவதாரணி மறைந்ததால், அந்த துயரத்தில் இருந்து இளையராஜா இன்னும் மீளாமல் உள்ளார். அதன் காரணமாக தனது பிறந்த நாளை அவர் விமர்சையாக கொண்டாடவில்லை. இருப்பினும் பிறந்தநாளையொட்டி கோடம்பாக்கத்தில் உள்ள தனது ஸ்டூடியோவுக்கு வந்த இளையராஜா, அங்கு ரசிகர்களின் வாழ்த்துக்களை நேரில் ஏற்றுக்கொண்டு, அவர்களுடன் புகைப்படம் எடுத்தார்.

இதற்கிடையே நடிகர் தனுஷ் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இந்நிலையில் இளையராஜா என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்துடைய போஸ்டரை, நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.