கன்னி – திரைவிமர்சனம்

காடும் காடு சார்ந்த இடத்தில் நடக்கும் ஒரு மருத்துவ க்ரைம் கதை.

மலைக்காட்டில் வாழும், பெருமூதாட்டியான செங்கா, ஒரு மருத்துவச்சி. அவளின் முன்னோர்கள் அளித்த ஒரு பாரம்பரிய கூடையில் உள்ள மருத்துவ பொருட்களும் மூலிகைகளும் தீர்க்க முடியாத நோய்களையும் தீர்த்து வைக்கும் வல்லமை கொண்டவை. அப்படி இருக்கும் போது மருத்துவர்களால் கைவிடப்பட்ட,  யாருனாலும் காப்பாற்ற முடியாத ஒரு டாக்டரை, மருத்துவச்சியான செங்கா காப்பாற்றுகிறார்.

அந்த டாக்டர் மருத்துவச்சி செங்காவின்  பெருமையை, வெளிநாடு வாழ் மருத்துவர்களுக்கும் தெரிவிக்க, அந்த மருந்துகளுக்கான காப்புரிமையை, தாங்கள் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் அந்த டாக்டரை அணுக, அவர் அதை வேண்டாம் என்று சொல்வதினால் இவர்கள் மருத்துவச்சியான செங்கா மற்றும்  அவரது குடும்பத்தினரை கொலை செய்து அந்த மருத்துவ கூடையை அபகரிக்க முற்படுகிறார்கள். இதன் பிறகு அவர்கள் நினைத்தது நடந்ததா..?  இல்லையா..?  என்பது மீதி கதை.

அருமையான கதைக் கரு, அற்புதமான லொகேஷன். திரைக்கதையில் மிகப்பெரிய கோட்டை.. இல்லை இல்லை ஓட்டை..

நடிகர்களிடம் நிறைய வேலை வாங்கி இருக்கலாம்.

இசையமைப்பாளரிடம் இருந்து அந்த இசைக் கருவியை பிடுங்கி விட்டு, தேவையான பொழுது அவரிடம் கொடுத்திருந்திருக்கலாம் .

வில்லனாக வருபவர் தான் வில்லன்னென்று காட்ட வேண்டும் என்பதற்காகவே பேசும் வசனம், எரிச்சலின் உச்சபட்சம்.

மலைவாழ் மக்களின் வாழ்க்கையை நேர்த்தியாக படம் பிடித்த ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்துக்கள்.

அதில் உள்ள சில பல குறியீடுகளைச் சொன்ன இயக்குனர் மாயோன் சிவா தொரப்பாடி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

ஆக மொத்தத்தில்  திரைக்கதை வசனம் பின்னணி இசை ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால்  கன்னி திரைப்படம் கண்ணியமான படமாக வந்திருந்திருக்கும்.