வடக்குபட்டி ராமசாமி படம் வெளியீடும் அமைச்சர் உதயநிதியின் தில்லாலங்கடியும்…

வரும் பிப்ரவரி 2ம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘வடக்குபட்டி ராமசாமி’. இப்படத்தை ‘டிக்கிலோனா’ படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். சந்தானம், மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

நடிகர் சந்தானம் தன்னுடைய படங்களில் எப்போது இரட்டை வார்த்தை வசனங்கள் அல்லது பேச்சு வழக்கில் இருக்கும் மட்டமான வார்த்தைகளை உபயோகிப்பது அவரது ஸ்டைல். இப்படத்தின் டிரைலர் பொங்கலுக்கு முன்பு வெளியானது. அதில் இடம் பெற்ற வசனத்தில் மறைந்த தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்களை கிண்டல் செய்யும் விதமாக ஒரு வசனத்தை வைத்து அது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வசனமாவது, “ஏன்டா டேய், இந்த சாமியே இல்லன்னு சொல்லி ஊருக்குள்ள சுத்திட்டு திரிஞ்சியே, அந்த ராமசாமி நீதான நீ,” என ஒருவர் சந்தானத்திடம் கேட்க, அதற்கு சந்தானம், “நான் அந்த ராமசாமி இல்ல,” என பேசும் வசனம் பெரியாரை அவமதிப்பதாக உள்ளதாக கடும் எதிர்ப்பு எழுந்தது.

பொங்கல் தினத்தன்று, சந்தானம் தனது டிவிட்டரில் அந்த வசனத்தை பின்னணியில் சேர்த்து பொங்கல் கொண்டாடும் வீடியோவைப் பதிவிட்டார். அதற்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்த நிலையில், சந்தானம் அந்தப் பதிவை நீக்கிவிட்டார். இதில் அதிசயம் என்னவென்றால், தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமி கொள்கையை பின்பற்றும் திமுக இளைஞர் அணியின் தலைவரும், தமிழக விளையாட்டு துறை அமைச்சரும் தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மகனுமான உதயநிதி இந்த வசனத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பதிவிட்டதற்கான காரணம் அவர் முன்பு பங்குதாரராக இருந்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் இந்த படத்தை வெளியிடுவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. தற்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தில் உதயநிதி பங்குதாரராக இல்லை, அவருடைய பினாமிகள் தற்போது அந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.

பிப்ரவரி 2ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தைப் பற்றி பத்திரிகையாளர்களை படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “படத்தில் இடம் பெற்ற அந்த வசனம் தந்தை பெரியாரை அவமதிக்கும் வசனமல்ல. காட்சிக்காகச் சேர்க்கப்பட்ட ஒரு வசனம்தான் அது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அதற்குரிய விளக்கத்தை சந்தானம் கண்டிப்பாகக் கொடுப்பார்.

பக்தியை வைத்து பணம் சம்பாதிக்கும் சிலரைப் பற்றிய கதைதான் இந்தப் படம். 70களில் நடக்கும் கதை. அப்போது ‘மெட்ராஸ் ஐ’ என்ற கண் நோய் பரவியது. அதை வைத்தும் படத்தின் திருப்புமுனை காட்சிகளை அமைத்துள்ளோம். ஒரே கட்டமாக 63 நாட்களில் படத்தை முடித்தோம்.

எனது முந்தைய படமான ‘டிக்கிலோனா’ படம் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு படமாக அமைந்தது. அதனால், அடுத்த படத்தை கடந்த காலத்தைப் பற்றிய ஒரு படமாக எடுக்க வேண்டும் என இப்படத்தை எடுத்துள்ளேன்.

எனது இரண்டு படங்களின் தலைப்பும் கவுண்டமணி அவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட தலைப்புகள்தான். இந்தப் படம் கலகலப்பான ஒரு படமாக இருக்கும்,” என்றார்.

இந்த படத்தில் ஏற்பட்ட சர்சையால் இப்படத்தை வெளியிட ஒப்பந்தம் செய்த உதயநிதி முன்பு அங்கம் வகித்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் தற்போது வெளியேறி விட்டது. வெளியேறிய ரெட் ஜெயண்ட் மூவிஸ் இப்படத்தின் வெளியீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் பினாமி நிறுவனமான ‘ரோமியோ பிக்சர்ஸ்’ சார்பாக ராகுல் இப்படத்தை வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பணம், வியாபாரம் என்று வந்துவிட்டால் கொள்கையும் கிடையாது, கோட்பாடும் கிடையாது என்பதற்கு ‘வடக்குபட்டி ராமசாமி’ படம் வெளியீட்டில் நடத்தப்பட்ட நம்ம அமைச்சர் உதயநிதியின் தில்லாலங்கடி வேலையே ஒரு சாட்சி.