பருத்திவீரன் – ஏமாற்றப்பட்டது அமீரா? ஞானவேல்ராஜாவா?? ஒரு எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்…

‘பருத்திவீரன்’ திரைப்பட சர்ச்சையை பற்றி பலர் ஊடகங்களில் பேசும்போது படத்தின் தயாரிப்பாளரான K.E.ஞானவேல்ராஜா, இயக்குநர் அமீரை பணமோசடி செய்து ஏமாற்றிவிட்டதாக சொல்லி வருகின்றனர். உண்மையில் ஞானவேல்ராஜா ஏமாற்றினாரா அல்லது ஞானவேல்ராஜா ஏமாற்றப்பட்டாரா என்பதை அறிந்துகொள்ள நமது ‘சினிமா சேட்டை’ செய்தி குழுவினர் விசாரிக்க ஆரம்பித்தனர். நம்முடைய விசாரணையில் தெரிய வந்ததை பார்க்கையில் ‘பருத்திவீரன்’ திரைப்பட தயாரிப்பில், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை அமீர் ஏமாற்றியதாக தான் தெரிகிறது. வழக்கத்தில் ஒரு வசனத்தை பெரும்பாலலானோர் சொல்லுவாங்க, “குனிய குனிய குத்திக்கிட்டே இருபாங்க! நாம தான் சுதாரிச்சு எழுந்துக்கணும்!!” இப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை தான் ‘பருத்திவீரன்’ தயாரிப்பில் சந்தித்தார் ஞானவேல்ராஜா.

2004ம் ஆண்டு காலகட்டத்தில் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா தனது ‘ஸ்டுடியோ க்ரீன்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அப்போது நடிகர் சூர்யா, ஞானவேல்ராஜாவுக்கு ஒரு படம் நடித்து தருவதாக உறுதியாளித்திருந்தார். இப்படிப்பட்ட சூழலில் ஒரு நாள் ஞானவேல்ராஜா இயக்குநர் அமீரை தான் அவருக்கு கொடுத்திருந்த கடன் பணமான ரூபாய் ஐம்பத்தி மூன்று லட்சத்தை வசூலிக்க சென்றுள்ளார். அன்றைய சூழலில் அமீர் தயாரித்து வெளியான ‘ராம்’ திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றிபெற்றாலும், வர்தக ரீதியாக பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதன் காரணமாக அமீர் பெரும் கடன் சுமையில் இருந்து வந்தார். இதன் காரணமாக அமீர் தான் ஞானவேல்ராஜாவுக்கு திருப்பி கொடுக்கவேண்டிய அந்த ரூ.53 லட்சம் பணத்தை கொடுக்க இயலவில்லை. ஞானவேல்ராஜாவின் கடன் வசூலுக்கான நடை தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

ஒரு நாள் அமீர் அலுவலகத்தில் அமீரிடம் பேசிக்கொண்டிருந்த ஞானவேல்ராஜா, தான் ஒரு புதிய திரைப்படம் தயாரிக்க இருப்பதாக சொல்லியுள்ளார். இதை கேட்ட அமீர், தன்னிடம் ‘பருத்திவீரன்’ என்ற ஒரு கதை இருப்பதாகவும் அதை தயாரிக்கிறீர்களா என கேட்டுள்ளார். கதையை கேட்ட ஞானவேல்ராஜா அவருக்கு புடித்ததால், தான் அப்படத்தை தயாரிக்க விரும்புவதாக அவரிடம் சொல்லியுள்ளார். ‘பருத்திவீரன்’ படத்திற்கு கார்த்தி கதாநாயகனாக முடிவு செய்யப்பட்டார். இதற்கு அமீரும் ஓகே சொல்லிவிட்டார். ‘பருத்திவீரன்’ திரைப்படத்தை First Copy அடிப்படையில் அமீர் தன்னுடையா Teamwork Production House மூலமாக எடுத்துக்கொடுப்பதாகவும் அதை K.E.ஞானவேல்ராஜாவின் Studio Green நிறுவனம் மூலமாக தயாரிப்பதாகவும் வாய்வழி ஒப்பந்தம் செய்யப்பட்டு படம் ஆரம்பிப்பதாரக்கான வேலை தொடங்கப்பட்டது. First Copy அடிப்படையில் ‘பருத்திவீரன்’ திரைப்படத்தை தயாரிப்பதற்க்கு பட்ஜெட் என்ன என்று ஞானவேல்ராஜா அமீரிடம் கேட்க, ரூ. 2.50 கோடி ஆகும் என்றும், இதற்கு 80 முதல் 85 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றும் அமீர் ஞானவேல்ராஜாவிடம் சொல்லியுள்ளார். ஞானவேல்ராஜாவும் ஓகே சொல்லியுள்ளார். படத்தின் பூஜை ஜூலை 22, 2004 அன்று AVM ஸ்டுடியோவில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் முன்னிலையில் கோலாலமாக ஆரம்பமானது. பூஜை முடிந்த சில நாட்களில் அமீர் மீண்டும் இப்படத்தின் பட்ஜெட்டை ரூபாய் மூன்று கோடி ஆகும் என்கிறார். சற்று உஷாரான ஞானவேல்ராஜா, அமீருடன் அவர் கேட்ட ரூ.3 கோடிக்கான ஒப்பந்தத்தை(Agreement) ரெடி செய்து அதை அமீரின் உறவினரும், ஆர்டிஸ்ட் மேனேஜருமான கபார் முன்னிலையில் அமீரிடம் கொடுத்து கையொப்பமிட சொல்ல, கையொப்பமிட மறுக்கிறார் அமீர்.

படப்பிடிப்பு 33 நாட்கள் கடந்து செல்கிறது, அமீர் மீண்டும் ரூ.25 லட்சம் தேவை என ஞானவேல்ராஜாவிடம் கேட்க, அந்த பணமும் கொடுக்கப்படுகிறது. முழு படத்தையும் 80 முதல் 85 நாட்களில் முடித்துவிடுவதாக சொன்ன அமீர், முதல் கட்ட படப்பிடிப்பை முடிப்பதற்க்கு 102 நாட்கள் இழுத்துவிட்டார். இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு இன்னும் 8 நாட்கள் தான் மீதம் இருப்பதாக, அமீர் தயாரிப்பு நிறுவனத்திடம் சொல்கிறார். அதே வேளையில் படத்தை முடிப்பதற்கு மொத்தம் ரூ. 4 கோடி ஆகும் என அமீர் மீண்டும் ஒரு பெரிய குண்டை போட ஞானவேல்ராஜா உட்பட தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் பெரிய ஷாக். தான் இயக்கிய ”ராம்’ திரைப்படத்தை, திரைப்பட விழாக்களுக்கு தான் எடுத்து செல்ல வேண்டியிருப்பதால், ‘பருத்திவீரன்’ படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பை தான் திரைப்பட விழா சுற்றுலாவை முடித்து வந்த பிறகு வைத்து கொள்ளலாம் என சொல்லியுள்ளார். திட்டமிட்டதை தாண்டி அமீர் தொடர்ந்து பணம் கேட்டு வந்ததனால், கடுப்பான ஞானவேல்ராஜா அமீரிடம் அவர் எடுத்த படத்தையும் கணக்கையும் கேட்டுள்ளார். அதுமட்டுமின்றி, “உங்கள் சம்பளம் எவ்வளவு என்று சொல்லுங்கள் அதையும் கொடுத்து விடுகிறோம், மீதி உள்ள 8 நாட்கள் காட்சிகளை நாங்களே படமாக்கிக் கொள்கிறோம்.” என சொல்லியுள்ளார் ஞானவேல்ராஜா.

ஞானவேல்ராஜாவுக்கு பதில் ஒன்றும் சொல்லாமல் திரைப்பட விழாவுக்கு சென்றுவிட்டு நாடு திரும்பிய அமீர், மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவதை பற்றி தயாரிப்பு நிறுவனத்திடம் ஒன்றும் சொல்லாமல் இருந்துள்ளார். நீண்ட நாட்கள் கழித்து, தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒன்றும் சொல்லாமல் திடீரென கார்த்தி உட்பட மற்ற நடிகர்களை படப்பிடிப்புக்கு அழைத்துள்ளார். இந்த விஷயம் ஞானவேல்ராஜா காதுக்கு எட்டுகிறது. 8 நாள் படப்பிடிப்பு தானே என ஞானவேல்ராஜாவும் அமைதி காத்து அமீரிடம் ஒன்றும் கேட்காமல் இருந்துள்ளார். 8 நாள் படப்பிடிப்பு தான் மீதி உள்ளது என்று சொன்ன அமீர் 30 நாட்களை தாண்டி 2ம் கட்ட படப்பிடிப்பை நடத்தி கொண்டிருந்தார். விஷயம் என்னவென்றால், அந்த படப்பிடிப்பின் பொது தொழில்நுட்ப கலைஞர்கள், துணை நடிகர்கள், புரொடக்ஷன் சாப்பாடு சப்ளை செய்பவர்கள் என பலருக்கு லட்சக்கணக்கில் கடன் வைத்துவிட்டு கடைசிகட்ட படப்பிடிப்பை 68 நாட்கள் கொண்டு முடித்தார் அமீர். ‘பருத்திவீரன்’ படப்பிடிப்பு முடிக்க திட்டமிட்ட 85 நாட்களை தாண்டி மொத்தமாக 165 நாட்கள் ஆகியது. அமீர் படப்பிடிப்பு நாட்களை மட்டும் இழுத்துவிடவில்லை அமீர், நாளுக்கு நாள் பட்ஜெட்டையும் அளவுக்கு அதிகமாக இழுத்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த முழு படத்தின் படப்பிடிப்பிற்கு, 2 லட்சம் 78 ஆயிரம் அடி பிலிம் செலவாகியுள்ளது என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தன்னுடைய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த 2,78,000 அடி பிலிமில் சுமார் நான்கு படங்களை முடித்து விடலாம் எனவும் அவரே அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

படப்பிடிப்பு முடிந்தும், போஸ்ட் புரொடக்ஷன் வேலை முடிக்கப்படாமல் இருந்து வந்தது. படத்தை முடிக்க வேண்டுமென்றால் இன்னும் ரூ.1.5 கோடி பணம் தேவை என்று கேட்டுள்ளார் அமீர். ‘பருத்திவீரன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ‘க்ரீன் பார்க்’ ஹோட்டலில் நடைபெற்றது. தம்பி கார்த்தியின் முதல் படம் சிக்கலின்றி வெளியாக வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில், இசை வெளியீட்டு செலவு மற்றும் அமீர் 2ம் கட்ட படப்பிடிப்பில் வைத்த கடன் சில என சுமார் ரூ.45 லட்சம் பணத்தை வங்கி டிரான்ஸ்ஃபர் மூலமாக செலுத்தியுள்ளார் நடிகர் சூர்யா.

தன்னுடைய படைப்பான ‘பருத்திவீரன்’ படத்தினை திரைப்பட விழாவுக்கு அனுப்பினால் கண்டிப்பாக விருது கிடைக்கும் என தயாரிப்பு நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார் அமீர். தயாரிப்பு நிறுவனமும் ஓகே செல்லியுள்ளனர். திரைப்பட விழாவுக்கு படம் அனுப்பப்பட வேண்டுமென்றால், அப்படம் டிசம்பர் மாதம் இறுதிக்குள் தணிக்கை செய்யப்பட்டால் தான் அந்த விழாவுக்கு அனுப்ப முடியும். எனவே தணிக்கை செய்வதற்கு, ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய டீம்வொர்க் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனம் தணிக்கை செய்து கொள்வதற்கு தடையில்லா சான்று(NOC) வழங்கவேண்டும் என்று அமீர் கேட்டுள்ளார். முதல் தயாரிப்பு, நடிகர் சிவகுமார் மகன், நடிகர் சூர்யா தம்பியின் முதல் படம் விருது பெற்றால் பெருமை தானே, தயாரிப்பு நிறுவனமும் ஓகே சொல்லி, அமீர் கேட்ட NOC’யை கொடுத்து விட்டது. ‘பருத்திவீரன்’ திரைப்படம் அமீரின் டீம்வொர்க் புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் தணிக்கை செய்யப்படுகிறது. அந்த சான்றிதழில் எங்கும் ஞானவேல்ராஜா பெயரோ அல்லது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பெயரோ இடம் பெறவில்லை.

தணிக்கை செய்வதற்க்கு மட்டுமே வழங்கிய NOC’யில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தார் தான் தயாரிப்பாளர்கள் என பதிவு செய்யப்பட்டிதிருந்ததை மறைத்து, படத்தின் வியாபாரத்தை ஞானவேல்ராஜாவுக்கு சொல்லாமல் ஆரம்பித்து விட்டார் அமீர். படம் தான் தணிக்கை ஆகிவிட்டதே, இனி வியாபாரம் செய்ய ஆரம்பிக்கலாம் என முடிவு செய்து வியாபார பேச்சை ஆரம்பித்தனர் ஞானவேல்ராஜாவும், தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த மற்றவர்களும். வியாபாரம் பேச இவர்கள் செல்லும்போது தான் இவர்களுக்கு தெரிய வருகிறது, தணிக்கை சான்றிதழை காண்பித்து ‘பருத்திவீரன்’ தான் இயக்கி, தயாரித்த படம் என சொல்லி அமீர் வியாபாரம் செய்ய ஆரம்பித்து விட்டார் என்று! இது மட்டுமின்றி சில ஏரியாக்களில் விநியோகஸ்தர்கள் சிலரிடம் படத்தின் ஏரியாவை விற்று ரூ. 1 கோடிக்கும் மேல் பணமும் பெற்றுவிட்டதாகவும் தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரிய வருகிறது. First Copy அடிப்படையில் தவறு படத்தை தயாரித்து கொடுப்பவர், படத்தை தயாரித்து மட்டுமே கொடுப்பது தான் அவருடைய பணி. ஆனால் அதை விட்டுவிட்டு தயாரிப்பாளரான Studio Green நிறுவனத்துக்கும் அதன் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜாவுக்கும் தெரியாமல் திருட்டு தானமாக ஒரு படத்தை விற்பது தான், ஏமாற்று வேலை, பித்தலாட்டம் என்று சொல்வார்கள். அந்த ஏமாற்று வேலை, பித்தலாட்ட வேலையை அமீர் அரங்கேற்றி இருப்பதை மறைத்தோ, மறந்தோ அவருடைய இயக்குநர் நண்பர்கள், சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன் மற்றும் பலர், “அமீரை ஞான.வேல்ராஜா ஏமாற்றிவிட்டார்” என்று கூக்குரல் எழுப்பி வருகின்றனர்.

இது மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளரிடம் First Copy அடிப்படையில் ‘பருத்திவீரன்’ என்ற ஒரு படத்தை ரூ.2.50 கோடி செலவிலும், அதிகபட்சம் 85 நாட்களில் படப்பிடிப்பை முடித்து கொடுப்பதாக சொல்லி அந்த பணத்தையும் பெற்றுவிட்டு, பூஜை போட்ட சில தினங்களில் ரூ.3 கோடி ஆகும் என்றும் சொல்லி மீதி ரூ.50 லட்சதையும் வாங்கிவிட்டு, முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகு, படத்தை முடிக்க ரூ.4 கோடி ஆகும் என்று சொல்லிவிட்டு, பிறகு படத்தின் பட்ஜெட்டை சுமார் ரூ.7 கோடி வரை ஏற்றிவிட்டத்தை பார்க்கும்போது, அமீர் என்ற ஒரு இயக்குநர் ஞானவேல்ராஜா என்ற ஒரு தயாரிப்பாளரை பலிக்கடாவை போல பயன்படுத்தியுள்ளார் என்று தான் தெரிகிறது. படம் ரிலீஸின் போது தயாரிப்பாளரை வட்டியுடன் சேர்த்து ரூ.8.80 கோடி வரை செலவழித்துள்ளார் என்பது தெரியவருகிறது. இயக்குநர் அமீருக்காக கங்கணம் கட்டிக்கொண்டு ஆதரவாக பேசி, ஞானவேல்ராஜாவை இழிவாக பேசும் அந்த இயக்குநர் நண்பர்கள் ஏன் அமீரின் இந்த செயலை பற்றி பேசாமல் இருக்கிறார்கள்.

தயாரிப்பு நிறுவனம், நடிகர் சூர்யா என இவர்கள் இவ்வளவு பணம் செலவு செய்த பிறகும், படத்தை முடிக்க மொத்தமாக ரூ.5 கோடி ஆகும் என அமீர் சொன்னதும், படத்தை தன்னுடைய தயாரிப்பு என்று விநியோகஸ்தர்களிடம் சொல்லி சில எரியாக்களை விற்றதும் அறிந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, கார்த்தியின் தந்தையார் சிவகுமார், நடிகர் சூர்யா என அனைவரும் கோபத்துகுள்ளானர்கள். அவர்களின் இந்த கோபம், நியாயம் தேடி புகாராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கதவை தட்டியது. அப்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக மறைந்த ராம நாராயணனும், செயலாளராக சிவசக்தி பாண்டியனும் இருந்துள்ளனர். அமீர் மற்றும் ஞானவேல்ராஜா ஆகியோரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் விசாரித்தனர்.

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் விசாரித்ததில் இரு தரப்பிற்கும் உடன்பாடு செய்யப்பட்டு ஒரு உடன்படிக்கை போடப்படுகிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மூலமாக தனக்கு நீதி கிடைக்கவில்லை என்று சொல்லி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஞானவேல்ராஜா, சிவகுமார், சூர்யா, கார்த்தி மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என இந்த ஐவர் மீது வழக்கு தொடுத்தார் அமீர். இந்த வழக்கை 2007ம் ஆண்டு முதல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இந்த வழக்கு விசாரணை, முடிவுறும் தருவாயில் இருப்பதால் இறுதி தீர்ப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.