‘ஓபன் கேட் பிக்சர்ஸ்’ சார்பில் அரவிந்த் வெள்ளைபாண்டியன், அன்புராசு கணேசன் இணைந்து தயாரித்திருக்கும் படம் “தூக்குதுரை”. இதில் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இனியா நடிக்கிறார். டென்னிஸ் மஞ்சுநாத் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே யோகிபாபுவை வைத்து “ட்ரிப்” படத்தை இயக்கியவர்.
முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, கதையின் நாயகனாகவும் நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். அதனால், இப்படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்ராயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஷ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜு, சிந்தாலப்பட்டி சுகி, ராஜா வெற்றிபிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
18 ஆம் நூற்றாண்டு, 1999 மற்றும் 2023 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் நடக்கும் கதையம்சம் கொண்டது இப்படம். சஸ்பென்ஸ் திரில்லர் கதையாக இருந்தாலும், அதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்.
தற்போது படப்பிடிப்பை முடித்துவிட்டு பின்னணி வேலைகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில், இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் படம் குறித்து கூறுகையில்,
”மன்னர்கள் காலத்தில், ராஜாவாக வாழ்ந்தவர்களின் தலைமுறைகள் தற்போது சாதாரண மக்களாக வாழ்ந்துக்கொண்டிருந்தாலும், அவர்களின் தலைமையில்தான் ஊர் கோயில் திருவிழாக்கள் நடக்கும். அப்படிப்பட்ட ஒரு குடும்பம், அந்த குடும்பம் தொடர்புடைய கோயில் திருவிழாவில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையப்படுத்தியது தான் படத்தின் கதை. இதில் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், அவருக்கு ஜோடியாக இனியா நடித்திருக்கிறார். அந்த ஊரின் ராஜகுடும்பத்து வாரிசாக மாரிமுத்து நடித்திருக்கிறார், அவரது தம்பியாக நமோ நாராயணன் நடித்திருக்கிறார்.
ராஜா பரம்பரை, 18 ஆம் நூற்றாண்டு என்பதால் படத்தில் எதாவது சர்ச்சையான விஷயத்தை பேசியிருக்கிறோம் என்று நினைக்க வேண்டாம். இது முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாக கொண்ட படம் மட்டுமே, இதில் மன்னர் காலத்து கதை ஒன்றை களமாக கொண்டு சொல்லியிருக்கிறோம். அந்த கதையை அனிமேஷனில் தான் சொல்லியிருக்கிறோம்” என்று கூறினார்.
யோகி பாபு – இனியா ஜோடியின் கெமிஸ்ட்ரி எப்படி இருந்தது? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்,
“ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. யோகி பாபு – இனியா காதலால் தான் பிரச்சனை வரும், அந்த பிரச்சனை எப்படி போய் முடிகிறது, என்பது தான் கதை. இரண்டு பேருக்கும் இடையே காதல் காட்சிகள் இருக்கிறது. ஆனால், பாடல் காட்சிகள் இல்லை.” என்றார்.
தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகளில் பிஸியாகியிருக்கும் ‘தூக்குதுரை’ படக்குழு விரைவில் படத்தின் டீசரை வெளியிடுவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.
ரவி வர்மா.கே ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்திற்கு கே.எஸ்.மனோஜ் இசையமைத்திருக்கிறார். தீபக் எஸ்.துவாரக்நாத் படத்தொகுப்பு செய்ய, ஜெய்முருகன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். மாஸ்டர் முகேஷ் மற்றும் ராம்குமார் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, அறிவுமதி மற்றும் மோகன்ராஜன் பாடல்கள் எழுதியுள்ளனர்.