விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகும் கொலை

“பிச்சைக்காரன் 2” படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் “கொலை”. இயக்குநர் பாலாஜி குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் “விடியும் முன்” என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

‘இன்பினிட்டி பிலிம் அட்வெஞ்சர்ஸ்’ மற்றும் ‘லோட்டஸ் பிக்சர்ஸ்’ சார்பில் கமல் போரா, பங்கஜ் போரா, லைதா தனஞ்செயன், ஆர்.வி.எஸ்.அசோக் குமார், டான்ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை, பி.பிரதீப், விக்ரம் குமார்.எஸ், சித்தார்த் சங்கர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார்.

விஜய் ஆண்டனி, மீனாட்சி செளத்ரி, ரித்திகா சிங் மற்றும் சித்தார்த் சங்கர், ராதிகா சரத்குமார், முரளி சர்மா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்திருக்கிறார். சுகுமார் நல்லகொண்டா ஒலி வடிவமைப்பு பணியை கவனித்துள்ளார்.

வரும் ஜூலை 21 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கொலை’ படம் பற்றி இயக்குநர் பாலாஜி குமார் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்,

“கொலை படத்தின் கதையை எழுதுவதற்கு ஒரு வருடம் எடுத்துக்கொண்டேன், அதேபோல் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்கும் அதிக நாட்கள் தேவைப்பட்டது. அதனால் தான் படம் நீண்ட நாட்களை எடுத்துக்கொண்டது. 1923 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை சம்பவத்தை படித்தேன். அந்த வழக்கு முடிக்கப்படவில்லை. ஆனால், பல எழுத்தாளர்கள் அந்த கொலை வழக்கு பற்றி எழுதியிருந்தார்கள். அவற்றை எல்லாம் படித்த போது தான், என்னுடைய ஐடியா மூலம் இந்த வழக்கை முடித்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன், அப்படி உருவானது தான் கொலை கதை.

இந்த கதை நன்றாக இருக்கிறது, விஜய் ஆண்டனிக்கு பொருத்தமாக இருக்கும், அவரிடம் கதை சொல்லுங்கள் என்று என் நண்பர் கூறினார். அதன்படி விஜய் ஆண்டனியிடம் இந்த கதையை நான்கரை மணி நேரத்தில் சொன்னேன். ஆனால், அவர் அரை மணி நேரத்திலேயே இந்த கதையை புரிந்துக்கொண்டார். அவர் சிபாரிசு செய்த தயாரிப்பு நிறுவனம் தான் இன்பினிட்டி. அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி சொல்ல வேண்டும். நான் கேட்டதை எல்லாம் புரிந்துக்கொண்டு தாரளமாக செலவு செய்தார்கள்.

பொதுவாக மர்டர் மிஸ்டரி ஜானர் படங்கள் அனைத்திலும் ஒரு டெம்ப்ளெட் இருக்கும். பல திருப்புமுனைகள், குழப்பங்கள் என அனைத்தும் இருக்கும், ஆனால் இறுதியில் கொலையின் பின்னணி மற்றும் ரகசியம் துப்பறிவாளன் மூலமாக தான் தெரியவரும். ஆனால், அந்த பாணியை உடைக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், அதற்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்திருப்பதும் புதிதாக இருக்கும்” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறுகையில்,

“இந்த படம் காலதாமதம் ஆனதற்கு படத்தின் மேக்கிங் தான் காரணம். ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் பாலாஜி குமார் செதுக்கியிருக்கிறார். நாங்கள் அவரிடம் ஒவ்வொரு முறையும் படம் எப்போது முடியும் என்று கேட்கும் போதெல்லாம், அவர் ஒரு காட்சியை காட்டுவார், அதை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கும். எடுக்கும் போது அந்த காட்சி சாதாரணமாக தான் இருக்கும், ஆனால் அதை இயக்குநர் மெருகேற்றிய விதம் வேற மாதிரி இருக்கும். அது தான் கிராபிக்ஸ். கிராபிக்ஸை எப்படி பயன்படுத்துவது, அதன் மூலம் ஒரு காட்சியை எப்படி மெருகேற்றுவது என்று பல விஷயங்களை இந்த படம் மூலம் நாங்கள் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டோம். நிச்சயம் படம் மேக்கிங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, பிலிம் மேக்கிங்கில் கொலை ஒரு பெஞ்ச்மார்க் படமாக இருக்கும்.” என்றார்.