பெயர் ஹாப்பி! திரையில் ஹெவி சென்டிமென்ட்!! – ‘ஹாப்பி ராஜ்’ திரை விமர்சனம்

ஜி.வி.பிரகாஷ் படம் என்றாலே லைட்டான காதல், சின்ன காமெடி, கொஞ்சம் இசை, கொஞ்சம் இளமை கலாட்டா என்று ஒரு மூடுல தான் ரசிகர்கள் திரையரங்குக்குள் செல்வார்கள். ஆனால் ‘ஹாப்பி ராஜ்’ அந்த expectation-ஐ பாதி வழியிலேயே திருப்பி, அப்பா-மகன் உறவின் கசப்பான உணர்ச்சிக்குள் தள்ளுகிறது. வெளியே இது ஒரு ‘பீல் குட்’ தலைப்பை வைத்த படம். ஆனால் உள்ளே பார்த்தால், இது உருவக்கேலி, அவமானம், குடும்ப மரியாதை, உள்ளுக்குள் சுமக்கும் வலி ஆகியவற்றைச் சுற்றி சுழலும் உணர்சசிபூர்வமான குடும்ப டிராமா. அதனால் தான், ‘ஹாப்பி ராஜ்’ நம்மை முழுக்க சிரிக்க வைக்காது; ஆனால் சில இடங்களில் அமைதியாகத் தட்டிக் கேட்கும்.

படத்தின் கதை, ஒரே வரியில் சொன்னால், ஒரு மகனின் வாழ்க்கையில் அவன் அப்பாவின் உருவம் எப்படி ஒரு சுமையாக மாறுகிறது? என்பதையே பேசுகிறது. அந்த மோதலை வைத்துக் கொண்டு காதல், குடும்பம், மரியாதை, மனக்காயம் எல்லாவற்றையும் கலக்க முயன்றிருக்கிறது படம். இந்த அடிப்படை நல்லது. காரணம், நம்முடைய சமூகத்தில் பாடி ஷேமிங் இன்னும் ஒரு “ஜோக்” மாதிரி பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதையே இந்தப் படம் ஒரு குடும்பத்தின் காயமாகக் காட்ட முயற்சிப்பது நல்ல விஷயம். ஆனால் அந்த நல்ல கருத்து முழுக்க, திரையில் சரிசமாமாகவும் வழுவாகவும் மாறுகிறதா என்றால், அதுதான் பெரிய கேள்வி.

ஜி.வி.பிரகாஷ், இந்தப் படத்தில் வழக்கம்போல தன் கம்ஃபர்ட் ஜோனில் இருக்கிறார். காதலில் விழும் இளைஞன், வாழ்க்கையில் சின்ன சின்ன தயக்கம் கொண்டவன், குடும்பத்தோடு மனதளவில் தூரமாக இருக்கும் மகன் — இந்த எல்லா இடங்களிலும் அவர் எதாரதமாக இருக்கிறார். எந்த காட்சியிலும் ஓவர் ஆக்டிங் செய்து கெடுக்காமல், சிம்பிள் ஆக நடித்திருக்கிறார். அது பிளஸ். ஆனால் படம் உணர்ச்சிப் பெருக்கத்தின் உச்சதிற்கு போகும் போது, அவர் நடிப்பு திறன் இன்னும் கொஞ்சம் ஆழமாக எடுத்திருக்கலாம் என்று தோன்றும். அதே நேரத்தில், இந்தக் கதையில் அவர் தன்னை விட கதைக்கு அதிக இடம் கொடுத்திருப்பது தெரிகிறது. ஹீரோயிசம் காட்டாமல் போனதே, படத்துக்கு ஒரு அளவுக்கு நன்மை.

ஸ்ரீ கௌரி பிரியா, ஹீரோயினாக ஃபிரெஷ் பீல் தருகிறார். அவர் வரும் காட்சிகளில் ஒரு லைட்டான அழகு இருக்கிறது. காதல் பகுதிகளில் அவர் இருப்பு சீராக வேலை செய்கிறது. ஆனால் உண்மையைச் சொன்னால், அவருடைய கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் எழுதப்பட்டிருக்கலாம். சில நேரங்களில், அவர் கதையில் ஒரு மனிதராக இல்லாமல், ஹீரோவின் உணர்ச்சி பயணத்தின் அருகில் நிற்கும் ஒரு முகமாக மட்டும் மாறிவிடுகிறார். இருந்தாலும், திரை ஆளுமை மற்றும் எதாரதமான மற்றும் இயற்கையான நடிப்பு மூலம் அவர் தனது பங்கைக் காப்பாற்றிக் கொள்கிறார்.

ஆனா… இந்தப் படத்துக்கு உண்மையிலேயே விமர்சனம் எழுத வைக்கும் மனிதர் ஒருவராக இருந்தால், அது ஜார்ஜ் மரியன் தான். அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் படம் திடீரென வேறு லெவலுக்கு போகும். சாதாரண அப்பா கதாபாத்திரம் இல்லை இது. சிரிப்புக்குள்ள மறைந்திருக்கும் அவமானம், மகனுக்காக விழுங்கிக் கொண்டிருக்கும் வலி, உள்ளுக்குள் உடைந்தாலும் வெளியே சிரிக்க வேண்டிய கட்டாயம் — இந்த எல்லாவற்றையும் அவர் கண்களிலேயே விளையாட வைக்கிறார். சில இடங்களில் அவர் பேசவே தேவையில்லை; முகம் போதும். ‘ஹாப்பி ராஜ்’ படம் ஒரு அளவுக்கு நிமிர்ந்து நிற்பதற்கே காரணம் ஜார்ஜ் மரியன் நடிப்பாற்றல் தான். வெளிப்படையாக சொல்லவேண்டிய விஷயம், இந்தப் படத்தின் உணர்வு பூர்வமான ஹீரோ ஜி.வி.பிரகாஷ் இல்லை… ஜார்ஜ் மரியன் தான் அந்த ஹீரோ!

அப்பாஸ், திரையில் மீண்டும் தெரியும் போது ஒரு இனிமையாக உணர்வை தருகிறார். அவரிடம் அந்த பழைய அழகு இன்னும் இருக்கிறது. ஆனால் அவருக்கு கிடைத்துள்ள கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் ஆழமாகவும் பலமாகவும் இருந்திருக்க வேண்டும். அவர் தோன்றும் காட்சிகள் நல்லா போகிறது; ஆனாலும் “இவர் இன்னும் அதிகம் செய்யக் கூடியவர்” என்ற உணர்வு தொடர்ந்து இருக்கும். கீதா கைலாசம் போன்ற குணச்சித்ர நடிகைகள், குடும்ப காட்சிகளில் படத்துக்கு ஒரு உண்மையான உணர்வை கொடுக்கிறார்கள். வீட்டுக்குள் பேசும் சின்னச் சின்ன உணர்வு பூர்வமான உரையாடல்கள், மௌன பாவனைகள் போன்றவற்றில் அவர்களுடைய நடிப்பு திறனை வெளிப்படுத்துகிறார்கள்.

இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன், ஒரு நல்ல கருத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அது இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம். உருவக்கேலி போன்ற விஷயத்தை “காமெடி கதையாக” ஆக இல்லாமல், ஒரு குடும்பத்தை உள்ளிருந்து சிதைக்கும் விஷயம் என்று சொல்ல நினைத்திருப்பது நல்ல முயற்சி. ஆனால் நல்ல கருத்தை நல்ல படமாக்குவது திரைக்கதை தான். அங்கே தான் ‘ஹாப்பி ராஜ்’ சில தடவை தடுமாறுகிறது. முதல் பாதி முழுக்க படம் ஒரு தொனியில் தேடிக்கொண்டே இருக்கும். காமெடியா? காதலா? குடும்ப டிராமாவா? என்று அது தானே குழம்பிக் கொண்டது போல சில காட்சிகள் இருக்கும். சில காட்சிகள் தேவையில்லாமல் நீள்கின்றன. சில நகைச்சுவை தருணங்கள் சிரிப்பை விட சலிப்பை தட்டுகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் படம் உணரச்சிப்பூர்வமான காட்சிகளில் பயணிக்கும் போது, கதைக்கு உயிர் வருகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ்க்கு அருகில் வரும் சில காட்சிகள், படம் முழுக்க சொல்ல வந்ததை இறுதியில் பூர்த்தி செய்கிறது.

ஒளிப்பதிவு, இந்தக் கதைக்கு தேவையான ஒளிப்பதிவை கொடுக்கிறது. எந்த இடத்திலும் அழகை அதிகப்படுத்தாமல், கதாபாத்திரங்களை பிரேமில் வைத்துக் கொண்டு கதை சொல்லும் முயற்சி நல்லது. இசை, குறிப்பாக பின்னணி இசை, உணரச்சிப்பூர்வமான காட்சிகளுக்கு நல்ல பலம் தருகிறது. பாடல்கள் பெரிய அளவில் நினைவில் நிற்காவிட்டாலும், உணர்ச்சிமிக்க பகுதிகளில் இசை வேலை செய்கிறது. எடிட்டிங் தான் இன்னும் கொஞ்சம் கூர்மையாய் இருந்திருக்க வேண்டும். முதல் பாதியில் 10-15 நிமிடம் டிரிம் செய்திருந்தால், படம் இன்னும் ஈர்ப்புடன் இருந்திருக்கும்.

‘ஹாப்பி ராஜ்’ முழுக்க சிரிக்க வைக்கும் படம் இல்லை. “ஜாலியா போய் டைம் பாஸ் பண்ணலாம்” என்று போனால், படம் வேறு திசையில் போகும். ஆனால் “ஒரு குடும்பத்தின் உள்ளுக்குள் பதுங்கி இருக்கும் வலியைப் பார்க்கலாம்” என்று போனால், இந்தப் படம் வேலை செய்கிறது. இது விசில் அடிக்க வைக்கும் வர்த்தக சினிமா அல்ல. அதே நேரத்தில், முழுக்க ஊட்டக்கூடிய நீதி போதிக்கும் திரைப்படமும் அல்ல. இரண்டு வழிக்கும் நடுவே நின்று, ஜார்ஜ் மரியன் நடிப்பை தோளில் சுமந்து உணர்வு பூர்வமான ஒரு எதார்தா சினிமாவாக இந்த ‘ஹாப்பி ராஜ்’ படம் இருக்கும்.

மொத்தத்தில், ‘ஹாப்பி ராஜ்’ படம் முழு சந்தோஷத்தை கொடுக்காது. ஆனால் மனசை கொஞ்சம் நெருடும் ஒரு கசப்பான உணர்வை கொடுத்து விடும். ஜி.வி.பிரகாஷ் தனது பங்கைக் சரியாகச் செய்திருக்கிறார். ஸ்ரீ கௌரி பிரியா மென்மையான கதாபாதிரத்தில் நடித்திருக்கிறார். அப்பாஸ் ஒரு அழகிய கதாபாத்திரம் ஏற்று மீண்டும் தமிழ் திரைக்கு வந்துள்ளார். ஆனால் திரையரங்கில் இருந்து வெளியே வரும்போது எல்லாவற்றையும் கடந்து பேசப்படப் போவது ஒரே பெயர் — ஜார்ஜ் மரியன். அந்த ஒரு நடிப்புக்காகவும், அதன் உணர்ச்சி முகுந்தா காட்சிகளுக்காகவும் ‘ஹாப்பி ராஜ்’ ஒரு முறை பார்க்கத் தகுந்த ஒரு குடும்ப உணர்வு கொண்ட எதார்தா டிராமா.

மதிப்பீடு: 3/5