செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு மற்றும் அறிமுக நடிகர் LK அக்ஷய் குமார் நடித்த “சிறை” திரைப்படம், வெளியான 75 நாட்களையும் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் வெற்றியை கொண்டாடும் விழா கோலாகலமாக நடைபெற்றது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான இந்த படம், 2025 டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றதுடன், பின்னர் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகியும் பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சகர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைத்து தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்ற இந்த படம், கடந்த ஆண்டின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாகவும் பேசப்பட்டது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் நடைபெற்ற விழாவில், படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நினைவுக் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதேபோல் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. விழாவில் பேசிய இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, உண்மை சம்பவங்களை சினிமாவாக மாற்றுவது எளிதல்ல என்றாலும், அதன் உண்மைத் தன்மையை காப்பாற்றி மக்களிடம் கொண்டு செல்ல முயன்றதே இந்த படத்தின் பலம் என கூறினார். பெரிய விளம்பரமின்றி, வாய்மொழி பாராட்டுகளால் மக்கள் மத்தியில் பரவியது இந்த படத்தின் வெற்றிக்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இயக்குநர் தமிழ், இந்த படத்தின் வெற்றி பலரின் கூட்டு முயற்சியின் விளைவு எனக் கூறி, தமிழ் சினிமாவில் உள்ள எழுத்தாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும், நல்ல கதைகள் தொடர்ந்து திரையரங்குகளுக்காக உருவாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தனது முதல் படமே இத்தகைய வெற்றியை பெற்றிருப்பது பெருமையாக இருப்பதாக தெரிவித்த நடிகர் LK அக்ஷய் குமார், ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் ஆதரவே தன்னுடைய நம்பிக்கையை அதிகரித்ததாக கூறினார். தனது 25வது படமாக அமைந்துள்ள “சிறை” வெற்றி, தனது பயணத்தில் புதிய துவக்கமாக இருப்பதாக விக்ரம் பிரபு பகிர்ந்துகொண்டார்.
விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், பெரிய நட்சத்திரங்களின் ஆதரவு இல்லாமல், கதையை மட்டும் நம்பி உருவான படம் இவ்வளவு பெரிய வெற்றி பெறுவது அரிதான விஷயம் என பாராட்டினார். தயாரிப்பாளர் லலித் குமார், ஊடகங்களின் நேர்மையான விமர்சனங்களும், ரசிகர்களின் ஆதரவும் தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என தெரிவித்தார். மொத்தத்தில், “சிறை” திரைப்படம் வணிக ரீதியிலும், விமர்சன ரீதியிலும் சாதனை படைத்துள்ளதாக படக்குழு பெருமையுடன் கொண்டாடிய இந்த விழா, தமிழ் சினிமாவில் உள்ளடக்கமிக்க படங்களுக்கு ரசிகர்கள் தரும் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.