உறவுகளின் அர்த்தத்தை பேசும் இனிமையான காதல் பயணம் – ‘கப்புள் ஃப்ரெண்ட்லி’ திரை விமர்சனம்

இயக்குநர் அஸ்வின் சந்திரசேகர் இயக்கத்தில் உருவான ‘கப்புள் ஃப்ரெண்ட்லி’ திரைப்படம், இன்றைய நகர இளைஞர்களின் வாழ்க்கை நடை, காதல், பொறுப்பு மற்றும் கனவுகளை ஒரே கோர்வையில் இணைக்கும் ஒரு சமகால ரொமான்டிக்–டிராமா படமாக உருவெடுத்துள்ளது. வாழ்க்கையில் முன்னேற போராடும் இரு இளைஞர்கள் எதிர்பாராத சூழ்நிலையில் சந்தித்து, ஒருவருக்கொருவர் துணையாக மாறும் தருணங்கள் படத்தின் மையக் கதையாக விரிகிறது.

நாயகனாக நடித்துள்ள சந்தோஷ் சோபன், தனது கதாபாத்திரத்தின் இயல்பான உணர்வுகளை மிக எளிமையாக வெளிப்படுத்தியுள்ளார். தொழில் நிலைபெற போராடும் இளைஞனின் மனநிலையை அவர் உண்மையுடன் வெளிப்படுத்துவது பாராட்டத்தக்கது. நாயகியாக மானசா வாரணாசி, தன்னம்பிக்கை நிறைந்த இளம் பெண்ணாக கவர்ச்சியும் நளினமும் கலந்த நடிப்பை வழங்கியுள்ளார். இருவருக்குமிடையிலான கெமிஸ்ட்ரி படத்தின் முக்கிய பலமாக அமைந்து, காட்சிகளை உயிர்ப்புடன் நகர்த்துகிறது.

யோகி பாபு தனது வழக்கமான நகைச்சுவை நேர்த்தியால் காட்சிகளில் சிரிப்பூட்டும் இலகுவான தருணங்களை சேர்க்கிறார். துணை நடிகர்கள் அனைவரும் கதையின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு தங்களது பங்களிப்பைச் செய்துள்ளனர். இயக்குநர் அஸ்வின் சந்திரசேகர், காதல் கதையை மட்டும் சொல்லாமல், உறவின் பொறுப்பு, பெண்களின் கனவுகள், நகர வாழ்க்கையின் நிஜங்கள் ஆகியவற்றையும் நுணுக்கமாக கையாள்கிறார். கதையின் முன்னேற்றம் மெதுவாக இருந்தாலும், உணர்ச்சிகளின் உண்மை தன்மை பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் நகர சூழலையும், காதல் தருணங்களின் மென்மையையும் அழகாக பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஆதித்யா ரவீந்திரன் அமைத்த பாடல்கள் காட்சிகளுடன் ஒத்திசைவாக இருந்து, பின்னணி இசை பல உணர்ச்சி தருணங்களை மேலும் வலுப்படுத்துகிறது. படத்தின் எடிட்டிங் மற்றும் கலை அமைப்பு காட்சிகளுக்கு நம்பகத்தன்மை அளிக்கின்றன.

மொத்தத்தில் ‘கப்புள் ஃப்ரெண்ட்லி’ என்பது வெறும் காதல் படம் அல்ல; வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் துணையாக நிற்கும் உறவின் அர்த்தத்தை உணர்த்தும் ஒரு மனம் கவரும் திரைப்படம். குடும்பத்தோடும், நண்பர்களோடும் ரசிக்கக்கூடிய ஒரு மென்மையான, நேர்மறையான அனுபவமாக இந்த படம் அமைந்துள்ளது.

இப்படத்தில் எந்தவித வன்முறை காட்சிகளோ, பாலியல் ரீதியான மறைமுகமான காட்சிகளோ, இரத்தக்களரி கட்சிகளோ இல்லையென்ற போதிலும் இப்படத்திரக்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு ‘A’ சான்றிதழ் அளித்துள்ளது. அதற்கான காரணம் இப்படத்திற்கு வைக்கப்பட்டுள்ள ‘Couple Friendly’ என்ற பெயர் தானாம்! கொடுமைடா சாமி!! எனவே 18 வயதுக்கு குறைவானவர்களை இப்படத்தை காண திரையரங்கத்திற்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்பத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

மதிப்பீடு: 4/5