புன்னகையும் உணர்வும் கலந்த ‘Con City’ – அர்ஜூன் தாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் புதுமையான கதைக்களங்களுடன் கவனம் ஈர்க்கும் படைப்புகள் தொடர்ந்து உருவாகி வரும் நிலையில், முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் ‘Con City’ திரைப்படத்தின் டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தில் இளம் நட்சத்திர நடிகர் அர்ஜூன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஆகியோருடன், மூத்த நடிகை வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Power House Pictures தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கி வருகிறார். குடும்ப ரசிகர்களை மையமாகக் கொண்டு நகரப் பின்னணியில் சொல்லப்படும் கதை என்ற அறிவிப்பே படத்திற்கான எதிர்பார்ப்பை உயர்த்துகிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்தவுடன் புன்னகை வரவைக்கும் விதமாக அமைந்துள்ள காட்சிப்படுத்தல், அதே நேரத்தில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் உணர்வுபூர்வமான பக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. ஆபிஸ் பேக்குடன் அர்ஜூன் தாஸ், கைப்பையுடன் அன்னா பென், பயணப்பெட்டியுடன் யோகிபாபு மற்றும் வடிவுக்கரசி, வீல் சேரில் வெற்றிக் கோப்பையுடன் குழந்தை அகிலன் என அனைவரையும் ஒன்றிணைக்கும் இந்த வித்தியாசமான அமைப்பு, படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தைத் தூண்டுகிறது. ‘Con City’ என்ற தலைப்பு முழுமையான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும் என்பதையும் உணர்த்துகிறது.

இதுவரை படப்பிடிப்பு சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மங்களூர், சென்னை, மும்பை ஆகிய இடங்களில் முக்கிய கட்டங்கள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பதும் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ‘Con City’ தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.

படத்தின் தொழில்நுட்ப குழுவில், எழுத்து மற்றும் இயக்கத்தை ஹரிஷ் துரைராஜ் மேற்கொள்கிறார். Power House Pictures நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு, அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, அருள் மோசஸ் எடிட்டிங்கை கவனிக்கிறார். இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் இணைந்துள்ள நிலையில், கலை இயக்கத்தை ராஜ் கமல் மேற்கொள்கிறார்.