‘பராசக்தி’ என் திரைப் பயணத்தில் மைல்கல் – ஸ்ரீலீலா

வசீகரமான தோற்றமும் இயல்பான நடிப்பும் துள்ளலான நடனத்தாலும் பான் இந்திய ரசிகர்களிடம் தனித்த அடையாளம் பெற்றுள்ள நடிகை ஸ்ரீலீலா, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். பட அறிவிப்பிலிருந்தே ஸ்ரீலீலாவின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்தப் படம் தனது திரைப் பயணத்தில் முக்கியமான இடத்தைப் பிடிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

‘பராசக்தி’ திரைப்படம் தனக்கு வலுவான கதாபாத்திரம் மட்டுமல்லாமல், வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுகளையும் கொடுத்துள்ளதாக கூறிய ஸ்ரீலீலா, படப்பிடிப்பு நாட்கள் அனைத்தும் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்ததாக இருந்ததாக தெரிவித்தார். தனது மீது நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் சுதா கொங்கராவுக்கு அவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்ததுடன், இந்த படம் தனது சினிமா வாழ்க்கையில் ஒரு கனவு அனுபவம் என்றார்.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய ஸ்ரீலீலா, அவரது வெற்றிக்கு கடின உழைப்புடன் சேர்ந்து நல்ல எண்ணங்களும் மனிதநேயமும் காரணம் என கூறினார். படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரையும் அன்புடன் அணுகும் அவரது குணம்தான் கோடிக்கணக்கான ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக அவரை மாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேபோல், ரவி மோகனின் நடிப்பு தன்னை எப்போதும் ஊக்குவிப்பதாகவும், ‘பராசக்தி’யில் அவரை முற்றிலும் புதிய கோணத்தில் பார்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். நடிகர் அதர்வா முரளியின் அர்ப்பணிப்பும் அவரை இன்னும் உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் என ஸ்ரீலீலா பாராட்டினார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் பணியாற்றிய அனுபவத்தையும் பகிர்ந்துகொண்ட ஸ்ரீலீலா, தாம் நடனமாடிய பாடல்களில் ‘ஆர்யமாலா’ பாடல் எப்போதும் மனதிற்கு நெருக்கமானதாக இருக்கும் என்றார். இப்படத்தில் இந்த பொன்னான வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நன்றியையும் தெரிவித்தார். ‘பராசக்தி’ திரைப்படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்கு அனுபவத்தை நிச்சயம் வழங்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ‘பராசக்தி’ திரைப்படம் 2026 ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.