வில்லன் அவதாரத்தில் ரவி மோகன்… தமிழ் சினிமாவுக்கான புதிய ‘பராசக்தி’

வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ரவி மோகன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. பல வெற்றிப் படங்களை வழங்கி தனக்கென உறுதியான ரசிகர் வட்டத்தை உருவாக்கிய ரவி மோகன், ஜனவரி 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட எதிர்மறை வேடத்தில் தோன்றுகிறார்.

படம் குறித்து பேசுகையில், ‘பராசக்தி’ சாதாரணமான ஒரு திரைப்படம் அல்ல என்றும், பலரின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் சேர்ந்தே இந்தப் படைப்பு உருவாகியுள்ளதாகவும் ரவி மோகன் தெரிவித்துள்ளார். தன்னை நம்பி மறக்க முடியாத கதாபாத்திரத்தை வழங்கிய தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு அவர் தனது நன்றியை தெரிவித்தார். தனது சினிமா பயணத்தில் இந்த கட்டத்தில் வில்லன் வேடத்தை ஏற்றுக்கொண்டதற்கான முக்கிய காரணம் இயக்குநர் சுதா கொங்கரா தான் என்றும், அவரது படங்கள் எப்போதும் தனக்கு உத்வேகம் அளிப்பதாகவும், அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என்றும் அவர் கூறினார்.

படத்தில் இணைந்து நடித்துள்ள அதர்வா முரளி குறித்து ரவி மோகன் பெரும் பாராட்டுகளைத் தெரிவித்தார். செட்டில் அவரது பாசிட்டிவ் எனர்ஜி அனைவரையும் கவர்ந்ததாகவும், இந்தப் படத்தில் அதர்வாவின் நடிப்பும் கதாபாத்திரமும் பார்வையாளர்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதேபோல் ஸ்ரீலீலாவையும் திறமையான நடிகையாக பாராட்டிய ரவி மோகன், ‘பராசக்தி’க்குப் பிறகு தமிழ்நாட்டில் அவருக்கு இன்னும் அதிக ரசிகர்கள் கிடைப்பார்கள் எனக் கூறினார்.
சிவகார்த்திகேயன் குறித்து பேசிய ரவி மோகன், அவரின் மீது தனக்கு அளவுகடந்த அன்பும் மரியாதையும் இருப்பதாக குறிப்பிட்டார். படத்தில் சிவகார்த்திகேயன் மற்றவர்களை ஓவர்ஷேடோ செய்கிறார் என்ற செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், தன்னுடைய கதாபாத்திரம் ஆழமும் முக்கியத்துவமும் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதில் சிவகார்த்திகேயன் மிகுந்த கவனம் செலுத்தியதாகவும் தெரிவித்தார். அவரது ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயம்தான் இன்றைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குறித்தும் ரவி மோகன் புகழாரம் சூட்டினார். குறுகிய காலத்தில் நூறு படங்களை இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷின் இசை, ‘பராசக்தி’யில் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மொத்தத்தில் ‘பராசக்தி’ தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றும், படம் பார்த்த திருப்தியுடன் இதை கூறுவதாகவும் ரவி மோகன் தெரிவித்தார். பார்வையாளர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் இந்தப் படம் பூர்த்தி செய்யும் என்பதில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும், திரையரங்கில் மறக்க முடியாத சினிமா அனுபவத்தை ‘பராசக்தி’ வழங்கும் என்றும் அவர் உறுதியாக கூறினார்.

டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்தப் படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜனவரி 10, 2026 அன்று இந்தப் படம் உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.