கீர்த்தியின் ‘பளிச்சென’ சுடும் தனி முயற்சி! – ரிவால்வர் ரீட்டா திரை விமர்சனம்

பாண்டிச்சேரி பின்னணியில் நகைச்சுவை, குழப்பம், அசைவில்லா உடல் போன்ற கலவைகளில் சுழன்று செல்லும் ‘ரிவால்வர் ரீட்டா’, ஒரு சாதாரண பெண் திடீரென மாட்டிக்கொள்ளும் பரபரப்பான சூழ்நிலையை காமெடி ரீதியில் சொல்ல முயற்சிக்கிறது. ஒரு பெண்ணின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றும் ஒரு உடல், அந்த உடலை மறைக்க போராடும் ஒரு குடும்பம் — இதுதான் படத்தின் மையம். இந்த ஒரு வரியில் எளிதாகத் தோன்றும் கதை திரையில் பல திசைகளில் பறப்பதாலே சில நேரங்களில் சிரிக்க வைக்கும், சில நேரங்களில் குழப்பத்தில் தள்ளும்.

கீர்த்தி சுரேஷ் இந்தக் கதையைக் கையில் பிடித்து நிறுத்தும் ஒரே தூண். நாயகியாக அவள் காட்டும் பதட்டமும், நகைச்சுவை கலந்த ரியாக்ஷன்களும் பல இடங்களில் படத்துக்கு உயிர் கொடுக்கின்றன. “என்ன நடக்கப் போகுது?” என்ற குணத்தின் குழப்பத்தை அவள் மிகவும் இயல்பாக பிடித்திருக்கிறார். இதே நேரத்தில் ராதிகா சரத்குமார் நடித்த பாட்டி பாத்திரம் — வீட்டின் ‘அட்டகாசமான தலைவி’ போல — காமெடியை அதிகரிக்கிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் அதன் வடிவமைப்பு. காட்சிகளை எழுதும் முறை, சில ஃபிரேம்களில் இருக்கும் டார்க்-காமெடி ஃபீல், பின்னணி இசை அளிக்கும் வித்தியாசமான துடிப்பு — இவை அனைத்தும் படம் ஒரு புதுமையைக் கொண்டதாகத் தோற்றமளிக்க செய்கின்றன. ஆனால் அந்த புதுமையை முழுதாய் தாங்கி செல்ல திரைக்கதை தயாராக இல்லை. ஆரம்பத்தில் ஓடும் வேகம், நடுவில் தடுக்க தடுக்க மந்தமாகி விடுகிறது. முக்கியமான திருப்பங்கள் கூட எதிர்பார்க்கப்பட்ட திசைகளில் செல்வதால் அதிர்ச்சி குறைகிறது.
காமெடியை எடுப்பதா, த்ரில்லரை எடுப்பதா, டார்க்-ஹ்யூமரா? — படம் சில சமயம் திசையறியாமல் குலுங்கும் நிலையில் தெரிகிறது. இதனால் கதாபாத்திரங்களுடன் முழு உணர்ச்சிப் பிணைப்பு உருவாக சரியான நேரம் கிடைக்கவில்லை. ஒரு பெரிய ‘சிக்கலில் சிக்கிய குடும்பம்’ என்ற சர்ச்சைக்குள் இருக்கும் போதிலும், அதன் பரபரப்பு அந்த அளவுக்கு சுவாரசியமாக காட்சிப்படுத்தவோ அல்லது காட்சிப்படுத்தியாதை சரியாக படத்தொகுப்பு செய்யவில்லையோ என தோன்றுகிறது.

எனினும், சில காட்சிகள் தன்னிச்சையாக சிரிக்க வைக்கும், சில சுண்டல் நொடிகள் நடிகைகளின் நடிப்பால் நன்றாக வேலை செய்கின்றன. கீர்த்தியின் ஸ்க்ரீன்-பிரசென்ஸ் படத்தை அடிக்கடி காப்பாற்றுகிறது. தொழில்நுட்ப ரீதியாக படம் நன்றாக இருப்பதே ஒரு பிளஸ்.

மொத்தத்தில் “ரிவால்வர் ரீட்டா” திரைப்படத்தை நயன்தாரா நடித்த “கோலாமாவு கோகிலா” படத்தை போல எடுக்கணும் என்று நினைத்து, ஜோதிகா நடித்த “ஜாக்பாட்” மற்றும் பிரபுதேவா நடித்த “குலேபகாவலி” படங்களை போல் எடுத்துள்ளார் இயக்குநர்.

மதிப்பீடு: 2/5