தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகள் மூலம் ரசிகர்களை கவர்ந்துவரும் நடிகர் விஷ்ணு விஷால், தற்போது நடித்து வரும் ‘ஆர்யன்’ திரைப்படத்தைச் சுற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இந்தப் படத்தின் கதையை கேட்டபோது பாலிவுட் நட்சத்திரம் அமீர்கான் தான் ஆச்சரியத்தில் உறைந்துவிட்டதாகவும், படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விஷ்ணு விஷால் கூறியதாவது, “’கட்டா குஸ்தி’ படத்தின் போது அமீர்கானுடன் சில சந்திப்புகள் நடந்தன. அப்போது ‘ஆர்யன்’ கதை பற்றி கேட்டதும், அவர் உடனே ‘கதை சொல்லுங்கள்’ என்று கேட்டார். கதை முடிந்ததும் அமீர்கான் மிகவும் ஆச்சரியப்பட்டு, ‘இந்தக் கதையை இந்திய அளவில் எடுத்துக்கொள்ளலாம், நான் வில்லனாக நடிக்கிறேன், நீங்க ஹீரோவா நடிங்க’ என்று சொல்லி விட்டார். ஆனால் பல காரணங்களால் அது நடைமுறைப்படவில்லை. ஆனாலும் அவருக்கு கதை பிடித்தது என்கிற உண்மை எங்களுக்கே பெரிய ஊக்கமாக இருந்தது,” என்றார்.
அதே நேரத்தில், ‘ஆர்யன்’ ஒரு சாதாரண சைக்கோ திரில்லர் அல்ல என்று விஷ்ணு விஷால் தெளிவுபடுத்தினார். “பலர் ‘சைக்கோ திரில்லர்’ என்றால் ‘ராட்சசன்’ மாதிரி இரத்தம் தெறிக்கும் காட்சிகள் நினைவுக்கு வரும். ஆனால் ‘ஆர்யன்’ அப்படி இல்ல. இதில் மனித மனத்தின் ஆழத்தைக் காட்டும் வகையில் நுணுக்கமான திருப்பங்கள் இருக்கும்.
வில்லனாக செல்வராகவன் நடிக்கிறார்; ஆனால் அவர் எந்த அளவுக்கு தீயவர் என்பதுதான் கதையின் முக்கியம். இதை குடும்பத்தோடு கூட பார்ப்பதற்கு ஏற்றதாக உருவாக்கியிருக்கிறோம்,” என்று கூறினார்.
படம் அக்டோபர் 31 அன்று தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் ஒரே நாளில் வெளியீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். விஷ்ணு விஷால் மற்றும் செல்வராகவன் இணையும் இந்தக் கூட்டணியில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்ரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘ஆர்யன்’ படம் வெளிவரவிருக்கும் நாளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.