இட்லியின் வாசனையில் அப்பா–மகன் பாசம் – ‘இட்லி கடை’ திரை விமர்சனம்

தமிழகத்தின் ஒரு கிராமத்தில் ராஜ்கிரண், அவரது மனைவியாக கீதா கைலாசம், மகனாக தனுஷுடன் அமைதியான வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். அந்த கிராமத்தில் ராஜ்கிரண் நடத்தும் சிறிய இட்லி கடைதான் குடும்பத்தின் வாழ்வாதாரம். பள்ளி படிப்பை முடித்த பிறகு சமையல் கலைக்குப் பெரிதும் விருப்பமுள்ள தனுஷ், கல்லூரியில் அதையே படித்து முடித்து, வெளிநாட்டில் சத்யராஜின் உணவகத்தில் வேலை பார்க்கிறான்.

ஆனால் சத்யராஜின் மகன் அருண் விஜய் போதை, சூது போன்ற தீய பழக்கங்களில் சிக்கிக் கொண்டு, பொறுப்பில்லாமல் வாழ்க்கையை வீணடிக்கிறான். பாசத்தால் மகனை அடக்க முடியாமல் தவிக்கும் தந்தையாக சத்யராஜ், விரக்தியோடு வாழ்கிறார். இதே சமயம், சத்யராஜின் மகளாக வரும் ஷாலினி பாண்டேவுக்கும் தனுஷுக்கும் காதல் மலர்கிறது. அதை அறிந்த சத்யராஜ் அவர்களுக்குள் திருமண நிச்சயத்தையும் செய்து விடுகிறார்.

எதிர்பாராத விதமாக ராஜ்கிரண், கீதா கைலாசம் இருவரும் இறந்ததால், தனுஷ் தன்னுடைய கிராமத்துக்கு திரும்ப வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அங்கு, வெளிநாட்டுக்குப் போகாமல், தந்தையின் இட்லி கடையை நித்யா மேனனின் உதவியுடன் நடத்தத் தொடங்குகிறார். ஆனால் இதனால் அவர், ஷாலினி பாண்டேவுடனான திருமணமும் சிக்கலில் சிக்கிறது. இந்நிலையில், அருண் விஜய் இந்தியா திரும்பி தனுஷை மீண்டும் வெளிநாடு அனுப்பி விட்டு தன்னுடைய தங்கை ஷாலினியை திருமணம் செய்யத் திட்டமிடுகிறார். இதனால் தனுஷ் – அருண் விஜய் இடையிலான மோதல் தீவிரமடைகிறது.

இந்த சண்டை எவ்வாறு முடிகிறது? தனுஷ் – ஷாலினி பாண்டேவின் திருமணம் நடைபெறுகிறதா? தனுஷின் இட்லி கடை எப்படித் தப்புகிறது? எதிரே இருக்கும் பரோட்டா கடை உரிமையாளர் சமுத்திரக்கனி கொடுக்கும் சவால்களை தனுஷ் எப்படிச் சமாளிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

அப்பா–மகன் பாசத்தை மையமாகக் கொண்டு தனுஷ் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். சில இடங்களில் ஓட்டம் மந்தமாகத் தோன்றினாலும், அப்பா மீதான மகன் பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் தனுஷின் தீவிரமான நடிப்பு அந்த குறைகளை மறக்கச் செய்கிறது. எப்போதும் போல் ராஜ்கிரண் எளிமையான, உணர்ச்சிப் பூர்வமான நடிப்பில் திகழ்கிறார். ஷாலினி பாண்டே தனது கதாபாத்திரத்திற்கு தேவையான அளவு உயிர் கொடுத்துள்ளார். அருண் விஜய் திறமையான நடிகர் என்பதைக் காட்டினாலும், அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு சற்றே குறைவாகத் தோன்றுகிறது. சத்யராஜின் நடிப்பு சுமாராகவே உள்ளது. நித்யா மேனன் எப்போதும் போலச் சிறப்பாகத் திகழ்கிறார். காவல் ஆய்வாளராக வித்தியாசமான வேடத்தில் வரும் பார்த்திபன் தனது தனித்திறமையால் கவனத்தை ஈர்க்கிறார்.

ஜி.வி.பிரகாஷின் இசை இப்படத்துக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது. கிரண் கௌசிக்கின் ஒளிப்பதிவு அழகாக காட்சியளிக்கிறது. எடிட்டிங் பொறுப்பில் ஜி.கே.பிரசன்னா சிறிது கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்; சில இடங்களில் படத்தின் ஓட்டம் மந்தமாகத் உணர வைத்திருக்கிறது.

டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனும், ஒன்டர்பார் பிலிம்ஸ் சார்பாக தனுஷும் இணைந்து தயாரித்திருக்கும் இந்த இட்லி கடை, குடும்பத்துடன் ரசித்து பார்க்கக்கூடிய, அப்பா–மகன் பாசத்தை அழகாகச் சித்தரித்துள்ள படமாகத் திகழ்கிறது.

மதிப்பீடு: 3.5 / 5