‘வீரவணக்கம்’ – புரட்சியின் வரலாற்றை மீண்டும் உயிர்ப்பிக்கும் சினிமா

சமூக சமத்துவமும், பெண்கள் முன்னேற்றமும், அரசியல் மாற்றமும் ஒன்றாக இணைந்த போராட்ட வரலாறு – அதுதான் ‘வீரவணக்கம்’ சொல்லும் கதை. கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளர் பி. கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்வை மையமாகக் கொண்டு, தமிழகம் மற்றும் கேரளாவின் போராட்ட வரலாற்றை இணைக்கும் விதமாக படம் நகர்கிறது.

தமிழகத்தின் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கம்யூனிச சிந்தனையோடு வாழும் பரத், ஊர் மக்களிடம் சாதி, ஏழை–பணக்கார வேறுபாடின்றி பழகுகிறார். பக்கத்து கிராமத்தில் சாதி வன்கொடுமையால் தவிக்கும் மக்களுக்கு துணை நிற்கும் அவர், அவர்களை கேரளாவுக்கு அழைத்து சென்று புரட்சியாளர்களை சந்திக்க வைக்கிறார். அங்கே மூத்த போராளி பி.கே. மேதினி, பி. கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கை வரலாறையும் கம்யூனிசப் புரட்சியின் உருவாக்கத்தையும் விவரிக்கிறார்.

சமுத்திரக்கனி, பி. கிருஷ்ண பிள்ளையாக, சீரிய உணர்ச்சி பூர்வமான வசனங்களும் தீவிரமான நடிப்பும் மூலம் கதாபாத்திரத்தை முழுமையாக சுமந்துள்ளார்.

பரத், செல்வந்த கம்யூனிசவாதியாக வித்தியாசமான வேடத்தில், குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் மகளின் காதலைப் பற்றி பேசும் தருணத்தில், ஆணவக் கொலைகளையும் சமூகத்தில் பரப்பப்படும் போலி கருத்துகளையும் எதிர்க்கும் வலுவான குரலாக மிளிர்கிறார்.

ரித்தேஷ், சிதிக், பிரேம் குமார், ரமேஷ் பிஷரோடி, சுரபி லட்சுமி உள்ளிட்டோர் தங்கள் கதாபாத்திரங்களை நம்பகத்தன்மையோடு ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் கவியரசு பிரமாண்டத்தை விரும்பாமல், கதாபாத்திர உணர்வுகளை உணர்ந்து இயல்பாக ஒளிப்பதிவு பதிவு செய்துள்ளார்.

இப்படத்திற்கு எம்.கே. அர்ஜுனன், ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட ஆறு இசையமைப்பாளர்களின் பாடல்களும் பின்னணி இசையும் காட்சிகளுக்கு உயிர் புகுத்துகின்றன.

இயக்குநர் அனில் வி. நாகேந்திரன், கம்யூனிசப் புரட்சியின் உருவாக்கத்தையும் பி. கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்வையும், மிகைப்படுத்தல்கள் இல்லாமல் உண்மையோடும் உணர்வோடும் பதிவு செய்துள்ளார். பிரமாண்ட மேக்கிங்கோ, பெரிய செலவோ இன்றி, “போராட்டமே தீர்வு” என்ற கருத்தைத் தெளிவாக வலியுறுத்தியுள்ளார்.

வரலாற்றை சினிமா வழியாக மீட்டுரைத்த ‘வீரவணக்கம்’, பார்வையாளர்களுக்கு வெறும் படம் அல்ல – ஒரு புரட்சியின் முழக்கம்.