‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் ‘விஸ்வம்பரா’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் (Glimpse) நேற்று வெளியிடப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குநர் வசிஷ்டா இயக்கத்தில், யுவி கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம், சிரஞ்சீவியின் அடுத்த பிரம்மாண்ட முயற்சியாக உருவாகி வருகிறது. விக்ரம், வம்சி – பிரமோத் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படம், ரசிகர்களிடையே நீண்டநாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள கிளிம்ப்ஸ், ஒரு குழந்தை மற்றும் முதியவருக்கிடையேயான உரையாடலுடன் தொடங்கி, மனிதனின் சுயநலத்தால் ஏற்படும் அழிவு மற்றும் அதனைத் தடுக்க வருகிற மீட்பர் பற்றிய கதையை சித்தரிக்கிறது. இதில் சிரஞ்சீவி, விஸ்வம்பரா சாம்ராஜ்யத்தின் பாதுகாவலராக சக்திவாய்ந்த தோற்றத்துடன் அறிமுகமாகிறார்.
இந்த காட்சித்தொகுப்பில், ஒளிப்பதிவாளர் சோட்டா கே. நாயுடு வழங்கிய கம்பீரமான காட்சிகள், தயாரிப்பு வடிவமைப்பாளர் ஏ.எஸ்.பிரகாஷின் செம்மையான கலைத்தொழில், இசையமைப்பாளர் எம். எம். கீரவாணியின் பின்னணி இசை ஆகியவை சிறப்பாகத் திகழ்கின்றன. ஹாலிவுட் தரத்தில் அமைந்துள்ள VFX காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த கிளிம்ப்ஸ், ரசிகர்களுக்கு சிறப்பான பரிசாக அமைந்துள்ளது. ‘விஸ்வம்பரா’ திரைப்படம் சிரஞ்சீவியின் திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரைப்படத்தில் திரிஷா கிருஷ்ணன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆஷிகா ரங்கநாத், குணால் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர். மேலும், மௌனி ராய் ஒரு சிறப்பு பாடல் காட்சியில் இடம்பெற்றுள்ளார்.
‘விஸ்வம்பரா’ 2026-ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.
கிளிம்ப்ஸ் (Glimpse) டீசரை பார்க்க கீழே உள்ள லிங்ககை கிளிக் செய்யவும்: